அதிரையில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் அதிரை பிறையின் கற்பனை கலந்துறையாடல்..!

அதிரையில் இந்த சாலை மறியல் வெகு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மறியலை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை யாவும் இந்த மறியல் செய்பவர்களிடம் எடுபடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட மறியல் செய்தவர்களை அதிரை பேருராட்சியினர் கைது செய்தனர். இவர்கள் விடுவிக்கபட்டதும் மீண்டும் தங்கள் மறியலை துவக்கிவிட்டனர்.

இது குறித்து அவர்களிடம் அதிரை பிறை நடத்திய கற்பனை கலந்துரையாடல் பின்வருமாறு….

அதிரை பிறை நிருபர்: நீங்கள் எதற்காக இவ்வாறு சாலை மறியல் செய்து மக்களை சிரமப்பட வைக்கிறீர்கள்?

மறியல்காரர்: எங்கள் உரிமையாளர் எங்களை சரியாக கவனிக்கவில்லை.

அதிரை பிறை நிருபர்: உங்கள் உரிமையாளர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று சற்று தெளிவாக கூறுங்கள்!

மறியல்காரர்: எங்கள் உரிமையாளர்கள் எங்களிடம் என்ன நாடுகிறாரோ அதை காலையிலே எடுத்து விட்டு எங்களை விட்டு விடுகின்றனர். மேலும் அவர்கள் எங்களுக்கு சரியாக உணவளிப்பதும் இல்லை. இதனால் தான் நாங்கள் சாலைகளில் திரிந்து கிடைப்பதையெல்லாம் திண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அதிரை பிறை நிருபர்: இது போன்று வீதிகளில் கிடைப்பதையெல்லாம் திண்பதால் உங்களுக்கு என்ன சிரமங்கள்  ஏற்படுகின்றன?

மறியல்காரர்: பல கஷ்டங்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். முன்பெல்லாம் ஊர் முழுவதும் தோப்புகள், புள்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள் இருக்கும், அங்கு சென்று எங்கள் வயிற்றை நிறைத்துக்கொண்டோம். ஆனால் தற்பொழுது அவையாவும் வீடுகளாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் மாறப்பட்டுள்ளன. சரி மீதம் உள்ள தோப்புகளை தேடி சென்றால் அங்கு வேலி அடைத்து உள்ளே நுழைய முடியாதவாறு செய்து விடுகின்றனர்.சாலை ஓரங்களில் ஏதாவது செடிகள் வளர்ந்திருக்கும் அதை சாப்பிடலாம் என்றால் சாலை ஓரங்களில் குப்பைகளும் பாலிதீன் பைகளுமே உள்ளன. வேறு வழியின்றி நாங்கள் அதை உண்டு வாழ்ந்து வருகிறோம். விளைவு தற்பொழுது எங்கள் இனத்தவர்கள் கோமாறி உள்ளிட்ட பல கொடிய நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிரை பிறை நிருபர்: சரி உங்களின் கோரிக்கை தான் என்ன?

மறியல்காரர்: எங்கள் உரிமையாளர்கள் எங்களை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் உணவளிக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தை எங்களுக்காக ஒதுக்கிநாங்கள் நிம்மதியாக நடமாட வழிகான வேண்டும். இவை அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றினால் எங்களின் இந்த சாலை மறியலை நிறுத்திக்கொள்கிறோம் இல்லையென்றால் எங்களின் இந்த போராட்டம் தொடரும்…

அதிரை பிறை நிருபர்: உங்கள் கோரிக்கைகள் நியாயமானது..வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மறியல்காரர்: இந்த உலகில் எங்களுக்கும் சம பங்கு உள்ளது. அனைவரும் எங்களை அடித்து விரட்டினால் நாங்கள் எங்கு செல்வது…முடிவை கூறுங்கள்…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close