துபாயில் உயிரிழந்த தமிழர் உடல் ஈமான் சங்க உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது!

Want create site? Find Free WordPress Themes and plugins.


துபாய்க்கு வேலை தேடி வந்த இடத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தமிழக நபரின் உடல் துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (47). அவர் துபாயில் உள்ள டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.

 பொருளாதாரத் தேவையின் காரணமாக அவர் மீண்டும் துபாய்க்கு வேலைக்கு வர முயற்சி செய்தார். பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியுடன் 3 மாத விசிட் விசாவில் துபாய்க்கு டிசம்பர் 17ம் தேதி வந்தார். 

துபாய் ரசிதியா பகுதியில் உள்ள நண்பர்களின் அறையில் தங்கி வேலை தேடி வந்தார்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான மருந்துகளை கொண்டு வந்து சாப்பிட்டும் வந்தார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காலை வேளையில் கழிப்பறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. அறையில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் வேலைக்குச் செல்ல தயாராவதற்கு காத்திருந்தனர். சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அவர் மயக்கமடைந்து கிடந்தார். 

உடனே அந்த அறையைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் கழிப்பறை கதவை உடைத்து மயங்கிக் கிடந்த குருமூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துபாய் ராஷித் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரத்த அழுத்தம் அதிகமாகி அவரது மண்டையில் உள்ள ரத்தக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தலை முழுவதும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைக்கப்பட்டார். 

அவர் சுவாசிக்க மெஷின் உதவி செய்யப்பட்டு வந்தது. மேலும் உணவு உட்கொள்ள, சுவாசிக்க தொண்டையில் ஒரு சிறிய துளை போடப்பட்டது. அவரது உடல் நிலை சீராக 10 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் 26.02.2015 அன்று இரவு மரணமடைந்தார். இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதற்கிடையே அவரது குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க துபாய் ஈமான் கல்சுரல் சென்டரை நாடினர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி வழிகாட்டுதலில் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரின் முயற்சியால் அவரின் உடல் விமானம் மூலம் இன்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author