1000 GB வேகம் கொண்ட இண்டெர்நெட் கண்டுபிடிப்பு!

இண்டர்நெட் வேகத்தில் 3G, 4G-க்கு அடுத்ததாக 5G புதிய பரிமாணத்தில் விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. அண்மையில், சாம்ஸங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5G அலைக்கற்றையில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7.5 GB வேகத்தில் இண்டர்நெட்டை பயன்படுத்தி சாதனை படைத்திருந்தது. 

அதைத்தொடர்ந்து, ஒருகாலத்தில் செல்போன் ஜாம்பவானாக திகழ்ந்த பிரபல நோக்கியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் விரைவில் நடக்கவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் ஆராய்ச்சி மாநாட்டில் 5G அலைக்கற்றையில் இண்டர்நெட்டை முன் எப்போதும் நாம் பார்த்திராத வகையில் அதிவேகத்தில் இயக்கி சோதனை நடத்திக்காட்ட உள்ளதாக அறிவித்தது. 

இந்நிலையில், லண்டனிலுள்ள சர்ரே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நொடிக்கு 1024 GB வேகத்தில் இண்டர்நெட்டை சோதனை செய்து உலக சாதனை படைத்துள்ளார்கள். இது தற்போது நாம் பயன்படுத்தி வரும் 3G, 4G-யை விட 65 ஆயிரம் மடங்கு அதிகமான வேகமாகும். சர்ரே பல்கலைக்கழகத்தில் உள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் (5G Innovation Centre (5GIC)) அந்த ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

பைபர் ஆப்டிக்ஸூக்கு இணையாக திறன்வாய்ந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் வழியாக இந்த சோதனையை செய்துள்ளனர். 100 மீட்டர் தொலைவிற்குள் அமைந்த ஆய்வுக்கூடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தியரிட்டிக்கலாக இண்டர்நெட்டின் வேகத்தை இந்த அளவுக்கு வெற்றிகரமாக சோதித்து காட்டியிருந்தாலும், வர்த்தக ரீதியாக கருவிகளில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர இன்னும் 3-4 ஆண்டுகள் ஆகும் என அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் ரஹீம் தபசோலி தெரிவித்தார்.

Advertisement

Close