எஸ்.பி. பட்டிணம் முஸ்லீம் இளைஞரை சுட்டுக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் கைதாகிறார்!

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் போலீசார் கடந்த 14.10.14 அன்று அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி விசாரணை நடத்தினார். மேலும் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் அந்த வாலிபர் கத்தியால் குத்த முயன்றதால் தான் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என்று சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சி.பி.சி.ஐ.டி.யிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் தகவல் தடய அறிவியல் சோதனையில் காளிதாஸ் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுதான் வாலிபர் உடலை துளைத்து இறந்திருக்கிறார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து காளிதாசிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறுகையில், சப்–இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுடும் அளவுக்கு வாலிபரால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. எனவே காளிதாஸ் மீது கைதியை கொன்றதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட டி.ஐ.ஜி. உத்தரவு கிடைத்தவுடன் காளிதாசை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Advertisement

Close