Adirai pirai
posts

அதிரையில் பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பேனர்!

பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு(swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது. 

பன்றி காய்ச்சல் என்றால் என்ன? 
ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது ஏ இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா ஏ, இன்புளுயன்சா பி மற்றும் இன்புளுயன்சா சி என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா ஏவால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா சி ஆல் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. 

பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின் மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது. பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918ல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய ‘எசுப்பானிய ஃப்ளூ” எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ம் ஆண்டில் ஏற்பட்ட ‘எசுப்பானிய ஃப்ளூ” காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயன்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. 

ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை ‘மிதமானதாக’ இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. 

நோயின் அறிகுறிகள்: 
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது, * தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல், விறைப்பு, தசைநார் வலி, இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு * தலை சுற்றல் / மயக்கம் * உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி * இடைவிடாத காய்ச்சல் (100 F க்கு மேல்), * வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல் (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கிக் கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம். நோய் தடுப்பு முறை நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும்போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

 கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும். 

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும்போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும். உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்கலாம். 

நன்கு ஓய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும்.

மேலும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் உட்கொள்வதை தவிர்ப்போம் .நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அனுக்க வேண்டும்.

இங்ஙனம்,
அதிரை பேரூராட்சி நிர்வாகம் .   

Advertisement