Advertisement

' />

சவூதியில் தமிழக இளைஞர் படுகொலை!

மயிலாடுதுறை வாலிபர் சவுதி அரேபியாவில் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மனைவி, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கங்கனம்புத்தூரை சேர்ந்த ஆனந்த மகன் காளிதாஸ் (26). கொத்தனார். இவர் 2014 பிப்ரவரி 28ம் தேதி தனது நண்பர்களுடன் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார்.

காளிதாசுடன், மயிலாடுதுறை திருஇந்தளூரை சேர்ந்த ஐயப்பன்(26), நல்லாடையை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட 5 பேர் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

கடந்த 13ம் தேதி நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஐயப்பன் கத்தியால் குத்தியதில் காளிதாஸ் படுகாயமடைந்து தங்கி இருந்த அறையிலேயே இறந்தார்.  இதுகுறித்து சவுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர்.

இந்த தகவல் காளிதாசின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காளிதாசுக்கு திருமணமாகி மாலா(24) என்ற மனைவி, குகன்(3) என்ற மகன், மகள்கள் தனுஷ்கா(2), 5 மாத குழந்தையான சுவேதா உள்ளனர்.

காளிதாசின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று காளிதாசின் மனைவி மற்றும் உறவினர்கள் நாகை கலெக்டர், மயிலாடுதுறை எம்எல்ஏ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை எம்எல்ஏ அருட்செல்வன் காளிதாசின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அரசிடம் சொல்லி உரிய நடவடிக்கை  எடுப்பதாக  உறுதி  அளித்தார்

Advertisement

Close