மறைந்து வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை! பெருகி வரும் விவாகரத்துகள்!

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றோ “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று சொல்லுமளவிற்கு மாறி விட்டது. பழைய குடும்ப கூட்டமைப்பு முறைகள் ஒட்டு மொத்தமாக மாறி தற்போது தனிக்குடும்ப முறைகள்தான் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த பழைய கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை மாறியதன் விளைவாக, குடும்ப பாசம் என்பதே மறைந்து விட்டிருக்கின்றது என சொல்லலாம்.

அன்றெல்லாம் குடும்பம், கோத்திரம் என்ற கலாச்சார சூழ்நிலையில் நாமெல்லாம் ஒரு கூட்டு குடும்பமாக ஒருமித்து வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த உறவே அப்பா அல்லது தாத்தா என்ற ஒரு தலைமையில் கீழ் இயங்கி வந்தது. அவ்வாறு வாழ்ந்த குடும்பங்களில் பெரும்பாலும் பாசம் என்ற ஓர் உணர்வு மிகைத்தோடி காணப்பட்டது. குடும்பங்களில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அதைக்கொண்டு தீராத பகை ஏற்படாத நிலை இருந்தது. குடும்ப தலைவராலோ அல்லது தலைவியாலோ அவைகளெல்லாம் உடனுக்குடன் களையப்பட்டு விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடியவர்களாகவும், குறிப்பாக உதவக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.

குடும்பத்தில் யாருக்காவது ஏதாகிலும் நேர்ந்தால் அதற்காக மற்றவர்கள் ஓடியாடி அவர்களுக்கு உதவக் கூடியவர்களாகவும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் அவை தலை போகிற காரியமாயிருந்தாலும், அவைகளை கூடவே இருந்து தீர்த்து வைக்க கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இந்த நிலை அக்குடும்பங்களில் ஒரு சப்போர்ட்டாகவும், பாதுக்காப்பாகவும் இருந்து வந்தது.

பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழும் வீடுகளில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் பாசம் மிகுதியானவர்களாகவும், மரியாதை மற்றும் தன்னடக்கம் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர் என்பது ஆய்வறிக்கையில் கிடைத்த தகவலாகும். தினமும் பாட்டியின் மடியின் படுத்துக் கொண்டு கதைக்கேட்டு உறங்கிய காலங்களை சற்றே நினைவில் கொண்டு வாருங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் குறும்புகளினால் அம்மாவோ, அப்பாவோ பிள்ளைகளை கண்டிக்கும்போது, அவர்கள் பயந்துக் கொண்டு பாட்டியிடம் தான் ஓடிவருவார்கள். பாட்டிதான் அவர்களை அரவணைத்து ஆறுதலும், புத்திமதிகளும் சொல்லுவார். இவ்வாறு தாத்தாவின் கண்காணிப்பிலும், பாட்டியின் அன்பான அரவனைப்பிலும் வளர்ந்தவர்கள் நன்னெறி மிக்கவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

அப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது சிலர் தொலைவான தூரத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும், அவர்களின் அவசியத்தை கருதி தத்தம் மனைவி மக்களோடு தற்காலிக தனிக் குடும்பம் நடத்துவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் தலைமை குடும்பத்தினர்களுடன் இணைந்துக் கொள்வார்கள்.

வீட்டு நிகழ்ச்சிகளில் தங்களது ஒற்றுமையையும், பாச உணர்வுகளையும் கட்டக் கூடியவர்களாக இருந்து வந்தனர். அன்றைய காலத்தில் வீடுகளில் திருமணம் போன்ற காரியங்கள் நடந்தால் பல நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் வந்து தங்கியிருந்து வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இவைகளை விவரிப்பதென்றால் தனி கட்டுரையே உருவாக்கலாம்.

அப்போதைய திருமண வீடுகளின் கொண்டாட்டங்களையும் கோலாகலங்களையும் தற்காலத்தில் பார்க்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு அனைத்து சூழ்நிலைகளும் மாறிவிட்டது. குறிப்பாக கூட்டு குடும்பம் என்ற சூழலே மாறிவிட்டது. திருமணமாகி கொஞ்சம் மாதங்களிலேயே கணவன், மனைவி இருவரும் தனிக் குடித்தனம் நடத்த தொடங்கி விடுகின்றனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெற்றவர்களையே கவனிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில், தாத்தா, பாட்டிகளின் நிலையை சொல்லவே வேண்டியதில்லை. அவர்களை அனாதை விடுதிகளில் அனாசயமாக சேர்த்து விட்டு விடுகின்றனர். பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை நல்லவிதமாக வைத்து கவனிக்க வேண்டிய, அதற்கான கடமையுடைய பிள்ளைகள் தத்தம் மனைவிமார்களின் மந்திரங்களினால் மாறு செய்யும் சூழல்களை நிறையவே காண முடிகிறது. மகிழ்ச்சிகரமான கூட்டு குடும்ப வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போய், இன்று இயந்திர வாழ்க்கை முறையே நடந்து வருகின்றது. பழமையை மறந்ததன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம்.

இதனால் தற்பொழுது கணவன் மணைவிக்கு இடையே உருவெடுக்கும்  சிறிய பிரச்சனை பெற்றோர்கள், வயதில் மூத்தவர்களின் ஆலோசனையில்லாமல் பெரிய பிரச்சனையாக மாறி விவாகரத்தில் வந்து முடிகிறது. தற்போதைய கால கட்டத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைவும் தனிக்குடித்தன வாழ்வின் அதிகரிப்புமே ஆகும்.

Advertisement

Close