துபாயில் சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்ட வாலிபர் மனநோயாளியாகி சென்னை ஏர்போட்டில் அரை நிர்வானமாக ஓடியதால் பரபரப்பு!

அபுதாபியில் இருந்து வந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் மீண்டும் அரை நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அபுதாபியில் இருந்து எத்தியாட்டு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர் (27) என்ற வாலிபர், திடீரென தரையில் அமர்ந்து, எனக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்தால்தான் போவேன் என கூச்சலிட்டார்.
உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர். திடீரென பிரபாகர், தனது சட்டை, பேன்ட்டை கழற்றி வீசிவிட்டு அரை நிர்வாணமாக ஓட தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கிருந்த பெண் பயணிகள் அலறியடித்து ஓடினர். போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து உடைகளை அணிய செய்தனர். அதன்பிறகும் உடைகளை கழற்றிவிட்டு, அவர் ஓட தொடங்கினார்.
இதனால், அவர் மன நோயாளியாக இருக்கலாம் அல்லது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. கூடுதலாக பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவரை பிடித்து வைத்தனர். அப்போது திடீரென வாலிபருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். திடீரென எழுந்த அவர், அவர்களை தள்ளிவிட்டு, மீண்டும் உடைகளை கழற்றி எரிந்துவிட்டு ஓட முயற்சித்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வாலிபரை குண்டுக்கட்டாக பிடித்து வைத்தனர். பின்னர், அந்த வாலிபர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
இதை தொடர்ந்து, வாலிபரை அழைத்து செல்ல யாராவது வந்திருந்தால் மேலாளர் அறைக்கு வரும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
அப்போது, அவரது அண்ணன் அங்கு சென்றார். விசாரணையில், கட்டிட வேலைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அபுதாபி சென்ற பிரபாகருக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை.
அதனால், திரும்பி வரும்படி உறவினர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் இப்படி செய்திருக்கலாம் என கருதுகின்றனர்.
பின்னர், பிரபாகரை உறவினர்களுடன், அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும், வெளியே எங்கும் அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியும், எச்சரித்தும் அனுப்பினர்.

-Dinakaran


Advertisement

Close