பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது!

பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு நடவடிக்கை
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகள் தமது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்கு செல்லும்போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
செல்போன் கொண்டு செல்லக்கூடாது
1. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவது, ‘செல்போன்’ போன்ற உபகரணங்களை எடுத்து வருவது கூடாது.
2. வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது தனியாக வருவதை தவிர்த்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் குழுவாக இணைந்து வர வேண்டும்.
3. பள்ளிக்கு வரும் வழியில் நீர் நிலைகள் ஏதேனும் இருப்பின் அதன் அருகில் செல்லக்கூடாது.
4. ரெயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள் இருப்பின் கவனமாக எச்சரிக்கையுடன் அதனை கடக்க வேண்டும்.
தெரியாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது
5. ரெயில்கள், பஸ்களில் பயணம் செய்யும்போது படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது.
6. பள்ளிக்கூடத்திற்கு வரும்போதும், வீட்டுக்குச் செல்லும் போதும், எந்த நேரத்திலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவது, அவர்கள் தரும் மிட்டாய், உணவு பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கி சாப்பிடக்கூடாது.
7. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவ, மாணவியர்கள் அல்லது பிற பள்ளி மாணவ, மாணவிகளுடன் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் கேலி கிண்டல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
சினிமாவுக்கு செல்லக்கூடாது
8. பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளிக்கூட நேரம் முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்கள் வீடு, சினிமா காட்சி போன்ற வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது.
மேற்குறித்த, அறிவுரைகளை பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தின்போது மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொந்தரவு
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் சில இடங்களில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு தகவல் வந்துள்ளன. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் மூலம் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தவறான நோக்கத்தில் தொட அனுமதிக்காதீர்கள்
மாணவிகளே பள்ளிக்கூடங்களில் யாராவது உங்களை தவறான நோக்கில் தொட்டுப்பழகினால் உடனே வகுப்பு ஆசிரியரிடம் தெரிவியுங்கள். அதுவே மாணவிகளை ஆசிரியர்கள் அப்படி தொட்டுப்பழகினால் உடனே அதை தலைமை ஆசிரியரிடம் தெரிவியுங்கள். யாரும் தவறான நோக்கத்தில் தொட அனுமதிக்காதீர்கள். சில இடங்களில் மாணவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. பாலியல் தொந்தரவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்தால் அது குறித்து கலெக்டர் தலைமையில் உள்ள பாலியல் கொடுமை தடுப்பு கமிட்டியிடம் தெரிவியுங்கள். பின்னர் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் தகவல் தெரிவியுங்கள். குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளில் பாலியல் தொந்தரவு கொடுத்தால் மாணவர்களும், மாணவிகளும் தங்களின் பெற்றோரிடம் தெரிவியுங்கள். பெற்றோர் அதுபற்றி சரியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியரிடம் தெரிவியுங்கள்.
இவ்வாறு கண்ணப்பன் கூறி இருக்கிறார்.

Advertisement

Close