சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்தை பாதிக்க வைத்த கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டம்! நேரடி ரிப்போர்ட்! (படங்கள் இணைப்பு)

சென்னை மெட்ரோ ரயில் பணிகளை தடுத்து நிறுத்தி குறளகம் சந்திப்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரியை ஸ்ரீபெரும்புதூருக்கு இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பாரிமுனையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் 152 ஆண்டுகள் பழமையானது. இந்த வளாகத்தில், அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி 113 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடமும் மிகவும் பழமையானது. தற்போது இதன் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரியை உடனே காலி செய்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் திங்கட்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இடம்மாறும் கல்லூரி
டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கட்டிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சட்டக்கல்லூரியை மாற்ற வேண்டும் என்று பொதுப் பணித்துறை தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டு ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இடத்தை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று சட்டகல்லூரியின் நிர்வாகி கூறியுள்ளார்.

பேரணி சென்ற மாணவர்கள்
இதனிடையே சட்டக்கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் குதித்தனர். பழைமைவாய்ந்த சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பியபடி, என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமைச் செயலகத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். போலீஸார் அவர்களை பாரிமுனை அருகே தடுத்து நிறுத்தினர்.

முடங்கிய போக்குவரத்து
அந்த இடத்தில் முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மாணவர்களின் போராட்டத்தால், பாரிமுனை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.

போலீஸ் தடியடி
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் சிலருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

களத்திலிருந்து, அதிரை பிறை செய்தியாளர் ஜைது

Advertisement

Close