அதிரை பெண்களுக்கு இடையூறாகும் ஆண்களின் அட்டி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

request-clipart-request-box

அதிரையில் பல பகுதிகளில் பல தெருக்களில் அங்குள்ள இளைஞர்கள், பெரியவர்கள் ஒரு சிலர் சேர்ந்துக்கொண்டு திண்ணைகள், முற்சந்துக்கள், கடை வாசல்கள் போன்ற பகுதிகளில் காலை முதல் இரவு வரை அமர்ந்துக்கொண்டுள்ளனர் இதனை நமதூர் பாஷையில் அட்டி என்று அழைப்பார்கள்.

இவ்வாறு அமர்வதால் பெரும்பாலும் வீன் பேச்சுக்களும், வீண் விவாதங்களும், வம்பு சண்டைகளும், புறம் பேச்சுக்களும், கடந்து செல்லும் பெண்களை கேலி செய்வது போன்றவைகள் தான் ஏற்படுவதற்க்கு அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் குறிப்பாக இதனால் பெண்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இது போன்று அமர்வதால் அதிகமான ஆண்களைக் கடந்து செல்ல கூச்சப்பட்டுக்கோண்டு வேறு மாற்று வழியில் செல்கின்றனர். இவ்வாறு அமர்ந்திருக்கும் நபர்களின் வீட்டுப் பெண்களும் இதனால் சிரமப்படக்கூடியவர்களே!!!

நண்பர்கள் சந்தித்து பேசுவது தவறு கிடையாது. ஆனால் இவ்வாறு பேசுவதால் பிறருக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுடைய உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் இப்பதிவு பதியப்படுகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு நாள்தோறும் அட்டி போட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் ஆண்கள் பெண்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அமைத்தால் நன்றாக இருக்கும் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.

 

வீண் பேச்சுக்கள் பற்றியும் நாவடக்கம் பற்றியும் இஸ்லாம்!!!

அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது.

 மனிதனை மதிப்பிட உதவுவது

ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன்’ என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே வழங்கியுள்ளனர்.

அபூ மூஸா அல்-அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

 நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன்

நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,

“முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்”. (அல்குர்ஆன் – அல் அஹ்ஸாப்: 70, 71)

இவ்வசனங்கள் தரும் படிப்பினைகளை நோக்குவோம்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ . مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

“(மனிதனுக்கு) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும்போது (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை”. (அல்குர்ஆன்- காஃப்: 17, 18)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்,

• இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.

• நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.

• அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.

• நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

 நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

• அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

• யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

• “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர். (அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

 நா காக்காவிடின் நரகமா?

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

 நடைமுறை வாழ்வில் நாவினால் செய்யப்படும் தீமைகள்

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல்,அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல்,இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல்,சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி நம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author