மதுக்கடையை அகற்ற செல்போன் டவரில் ஏறி போராடிய காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்தார்

Want create site? Find Free WordPress Themes and plugins.

11011901_1036936769659148_5708518701656791749_nமார்த்தாண்டம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் மயங்கிய நிலையில் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.

இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் கடையை அப்புறப்படுத்தக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு கொடுத்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு அந்த கடையை உண்ணாமலைக் கடை பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது. அதன்பிறகும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்தார். அவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.

அதன்பிறகும் டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்படவில்லை. இதையடுத்து இன்று அங்கு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக சசிபெருமாளும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும், பா.ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஜெயசீலன் அறிவித்தனர்.

இன்று காலை இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள 60 அடி உயர செல்போன் டவரில் ஏறினர். கையில் மண்எண்ணெய் கேனையும் எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் மற்றும் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்போன் டவரில் ஏறி நின்ற சசிபெருமாளையும், ஜெயசீலனையும் கீழே இறங்கி வரும்படி கூறினர்.

அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை அகற்றும் வரை கீழே இறங்க மாட்டோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் சுற்று வட்டார மக்களும் குவிந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் திரண்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் உயர் அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில், சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த போராட்டத்தின்போது, செல்போன் டவர் மீது ஏறிய தீயணைப்பு துறையினர் சசி பெருமாளை மயங்கிய நிலையில் மீட்டனர். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

மதுக்கடைகளை மூடக்கோரி நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சசி பெருமாள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்தியவாதி சசி பெருமாள் சேலம் மாவட்டம், ஏலம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author