நாடு முழுக்க Maggi Noodles-சிற்கு எதிர்ப்பு: ஆபத்தானது என டெல்லி அரசு அறிவிப்பு

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சை இந்தியாவின் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவுப்  பொருளாக இருந்து வருகிறது. இதில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம்  சேர்க்கப்பட்டிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதன் காரணமாக மேகி  நூடுல்சை சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என்பதால் உத்தரப் பிரதேச அரசு தடை விதித்ததுடன், நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

மேலும், மேகி நூடுல்சின் விளம்பரத்தில் நடித்த நடிகை மாதுரி தீட்சித்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, மத்திய  உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி பல்வேறு மாநிலங்களிலும் மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தி  வருகிறது. இதன் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில  அரசுகள் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு நேற்று தடை விதித்தன. கேரளாவின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் அனூப் ஜேக்கப்,  ‘பாதுகாப்பு காரணங்களுக்காக மேகி நூடுல்சுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது’ என்றார். 

அரியானாவில் பல்வேறு மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதே  போல கர்நாடக மாநில அரசும், மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை கூட்டத்தில்  ஆலோசனை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என மேற்கு வங்க உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மாநில அரசும்  மேகி நூடுல்சின்  தரம் குறித்து அறிய 13 பாக்கெட்டுகளை வைத்து ஆய்வக சோதனை நடத்தியது.  இதில், மேகி நூடுல்ஸ் ஆபத்தானது  என  கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஏற்கனவே உத்தரபிரதேசம், கேரளா மாநிலத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு தடை  விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நெஸ்லே நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ‘மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட  அளவில் தான் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வில், மேகி நூடுல்ஸ் தரமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு  பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது’ என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அமிதாப், மாதுரி, ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில்  நடித்துள்ளனர். விளம்பர தூதர்களான இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே பீகாரின்  முசார்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் சுதிர்குமார் ஓஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 30ம் தேதி மேகி நூடுல்ஸ் சாப்பிட்டதில்  எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, நெஸ்லே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன் குப்தா, இணை இயக்குனர் சபாப் ஆலம் மற்றும்  விளம்பர தூதர்களான நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் வழக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ராம்சந்திர பிரசாத், ‘காஜி முகமத்பூர் போலீசார் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்கள், பாலிவுட்  நட்சத்திரங்கள் மீது வழக்கு பதிய வேண்டும். விசாரணைக்கு தேவைப்பட்டால் அவர்களை கைதும் செய்யலாம்’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவு  பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிரையில் அதிகமாக  பயன்படுத்தப்படும் இந்த உணவு பொருள். காலை வேளையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சுலபமாக சமைத்திடலாம்ன்று இதனை சமைத்து கொடுக்கின்றனர். ஆனால் இதில் உள்ள Chemical நம் உடலுக்குள் சென்று பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இதனின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால் அல்லாஹ்வின் உதவியோடு சீரான உடல் நலத்தை பெறுவோம்.
– அதிரை சாலிஹ் 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close