சென்னை விமான நிலையத்தில் விபத்து! பெரும் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் 32வது முறையாக 9அடி உயர கண்ணாடி கதவு உடைந்து விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் இருக்கையில் இருந்து வெளியே சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2015 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி நடந்தது. 

உள்நாட்டு முனையத்தில் 2013 ஏப்ரல் 23ம் தேதி விமான போக்குவரத்து தொடங்கி, 19 நாட்களில் மே 12ம் தேதி அதிகாலையில் மேற்கூரை உடைந்து விழுந்து முதல் விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் கண்ணாடி கதவுகள், சுவர்கள், கிரானைட் கற்கள், மேற்கூரைகள் என தொடர்ச்சியாக, கடந்த மாதம் வரை 31 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், 2 விமான நிலைய ஊழியர்கள், 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். 6 குளிர்சாதன பெட்டிகள் உடைந்து நொறுங்கியது.

இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்துக்கு செல்லும் ஜி14 வாசலில் 9 அடி உயரம், 4 அடி அகலத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்நேரத்தில் பயணிகள், அவ்வழியாக செல்லவில்லை. இதை அறிந்ததும், விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கண்ணாடி சிதறல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Advertisement

Close