கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் உடல் பகுதி கண்டுபிடிப்பு

கடந்த டிசம்பர் 28-ந் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள்.இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 14 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இது வரை 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நேற்று விமானத்தின் வால் பகுதி மீட்கப்பட்டது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருபவர்கள் விமானத்தின் உடல் பகுதியை கடலுக்கடியில் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.சோனார் கருவியை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் கடலுக்கடியில் 33 அடி நீளமும், 13 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட பாகம் கிடப்பது தெரியவந்துள்ளது. இது விமானத்தின் உடற்பகுதியாக இருக்கலாம் என மீட்பு படையினர் கருதுகின்றனர். எனவே இதன் அருகில் தான் கறுப்பு பெட்டியும் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே குறிப்பிட்ட அப்பகுதியில் கடலுக்கு அடியில் நீந்தி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று வால் பகுதி கிடைத்த இடத்திலிருந்து கறுப்பு பெட்டியில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Close