பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு! விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு!

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க பள்ளித் தேர்வுகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. மேலும், விடைத்தாள்களை கையாள்வது குறித்து மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளின்போது மாணவர்களின் கால விரயம், தேர்வுப்பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களின் பணிப்பளுவை குறைத்தல் மற்றும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில் 2013-ஆம் ஆண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும், மற்ற பாடங்களுக்கு 54 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும் வழங்கப்பட்டன. தேர்வை எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள்களில் பெரும்பாலான பக்கங்கள் வீணாக்கப்பட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறியிருப்பது:
பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு 40 பக்கங்களுக்கு பதில் 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் 30 பக்கங்கள் விடை எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கு 52 பக்கங்களுக்கு பதில் 44-ம், கணினி அறிவியல் பாடத்துக்கு 40-க்கு பதில் 32-ம், கணக்கியல் பாடத்துக்கு 54-க்கு பதில் 46-ம், இதர பாடங்களுக்கு 40 பக்கங்களும் வழங்கப்படும்.
10-ஆம் வகுப்பு தேர்வுக்கு மொழிப்பாடங்களுக்கு 32-க்கு பதில் 24-ம், தமிழ் 2-ம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், பணம் பெறும் படிவம் ஆகியவற்றின் மாதிரிகள் தனித்தனியாக வழங்கப்படாமல், முதன்மை விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
சமூக அறிவியலில் முதன்மை விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் 2 இந்திய வரைபடங்களும், ஒரு ஐரோப்பிய வரைபடமும், ஒரு ஆசிய வரைபடமும் அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
இந்த சுற்றறிக்கை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு வகுப்பறையில் ஆசிரியர்களால் முறையாக தெரிவிக்கப்பட்டு உரிய பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த சுற்றறிக்கை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Close