எவரெஸ்ட் சிகரத்தை கடந்த சவுதி பெண்மணி!


எவரெஸ்ட் சிகரத்தை கடந்த முதல் சவுதி பெண்மணி ரஹா மொஹர்ரக்! இவரது சாதனையை பாராட்டி பாராட்டு விழா ஒன்று ரியாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்தது. சவுதி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் சல்மான் சைதான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ரஹா மொஹர்ரக்கின் சாதனையை வெகுவாக பாராட்டியும் பேசினார்.

ரஹா மொஹர்ரக் இது பற்றி கூறும்போது ‘எனது நாட்டுக்காக இந்த சாதனையை செய்து முடிக்க எனது குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. எனது விடா முயற்சியும் எனமேல் எனக்கிருந்த நம்பிக்கையும் இறைவனின் கிருபையும் இத்தகைய சாதனையை எவ்வித சிரமமுமின்றி முடிக்க இலகுவானது. தான்சானியாவில் இருக்கும் கிளிமாஞ்சாரோ சிகரத்தையும் நான் கடந்துள்ளேன். ரஷ்யாவில் இருக்கும் 5642 மீட்டர் உயரமுடைய எல்பர்ஸ் சிகரத்தையும் 2012ல் கடந்தேன். அன்டார்டிகாவில் இருக்கும் வின்சன் மலையையும் 2013ல் கடந்துள்ளேன்.’

‘சவுதி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உலகின் பார்வைக்கு எனது சாதனை சிறந்த பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது எனது சொந்த முயற்சியில் உண்டானது. இதனால் வேறுபலன் எதனையும் அடையவில்லை. சவுதி பெண்களைப் பற்றி உலகம் வைத்துள்ள தவறான எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினேன். இந்த சாதனையானது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது’ என்கிறார் ரஹா முஹர்ரக்.

பெண்கள் படிப்பதையோ, விளையாடுவதையோ, வேலைக்கு செல்வதையோ இஸ்லாமும் தடுக்கவில்லை. சவுதி அரசும் தடுக்கவில்லை. ஆண்களோடு ஒட்டி உறவாடி அதனால் பெண்மைக்கு இழுக்கு வருவதை தடுப்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் வகுக்கிறது. அதுவும் பெண்களின் நன்மையை நாடியே…. அளவுக்கு அதிகமாக ஆண்களையும் பெண்களையும் கலக்க விட்டதாலேயே பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தினம் நமது செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பலரின் விமரிசனங்களுக்கு தனது செய்கையால் அழகிய பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை நாமும் வரவேற்போம்.

Advertisement

Close