தஞ்சையில் 6ம் தேதி முதலமைச்சர் கோப்பைக்கான குழு விளையாட்டு போட்டி!

முதலமைச்சர் கோப்பைக்கான தஞ்சை மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதற்கு தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தஞ்சை மாவட்ட விளையாட்டரங்கில் 2014- 15ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வரும் 6ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பெண்களுக்கான கால்பந்து போட்டி, 7ம் தேதி ஆண்களுக்கான ஹாக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி போட்டிகள் நடத்தப்படும். கமலா சுப்பிரமணியம் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து விளையாட்டு போட்டிகள் 7ம் தேதி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் காலை 9 மணிக்கு துவங்குகிறது. தாமதமாக வரும் அணிகள் போட்டியில் பங்கேற்க அனுமதியில்லை. 

8ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெண்களுக்கான ஹாக்கி, கூடைப்பந்து, கையுந்து பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், டென் னிஸ், நீச்சல் போட்டிகள் நடக்கிறது மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள 25 வயது பூர்த்தியடைந்திருக்க கூடாது. வயது சான்றிதழ் அவசியம் எடுத்துவர வேண்டும். தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படுவோர் மண்டல அளவிலான போட்டியில் பங்கு கொள்ளலாம். 

இதற்கு தகுதியுள்ளோர் அனைத்து சான்றிதழ்களுடன் தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசாக ரூ.750, மூன்றாம் பரிசாக ரூ.500 வழங்கப்படும்.

Advertisement

Close