பள்ளிவாசல் நினைவுகள்!

ஆரம்பத்தில் சரியாக ஓத வராததாலும், உஸ்தாத் அவர்களின் கண்டிப்பாலும் பள்ளிவாசல் எனும் கட்டிடம் ஏதோ கண்டிப்பு நிறைந்த இடமாகவே பட்டது. இருப்பினும் நான் பிறந்த என் வீட்டுக்கும், பிறகு ஆறாவது வகுப்பு படிக்கும்போது புதிய வீட்டுக்கு மாறிய போதும், 2 வீட்டுக்கும் பள்ளிவாசலுக்கும் இருந்த / இருக்கும் தூரம் 20 மீட்டர் கூட இருக்காது.
வாழ்க்கையின் பல நிலைகளை கடந்தாலும் பள்ளிவாசல் பக்கத்திலேயே வாழ்ந்த அந்த காலங்கள் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலங்களை கொண்டது.
எங்கள் தெரு [ தரகர் தெரு ] பள்ளிவாசலுக்கென்று ஒரு நல்ல அமைப்பு இப்போதும் இருக்கிறது. கடற்கரை பகுதியிலிருந்து வீசும் காற்று குளத்தி தண்ணீரில் பட்டு ஒரு தென்றலாகவே எப்போதும் பள்ளிவாசலை நிரப்பும். தொழுகை முடிந்ததும் உடனே யாரும்  வீட்டுக்கு போக நினைக்காத அளவுக்கு அந்த காற்று எங்களை கட்டிப்போடும்.
சின்ன வயதில் எங்கள் தெரு பள்ளிவாசல் நினைவுகள் எல்லாமே எனக்கு காமெடியானது. 70 களின் தொடக்கத்தில் பள்ளிவாசலில் ஒதுச்செய்ய ஹவுல் கட்டினார்கள். தெரு,..ஏற்கனவே நிறைய சட்ட திட்டங்கள் நிறைந்த தெரு. எனவே ஹவுலில் யாரும் இறங்கினால் நூறு ரூபாய் அபராதம் என்று எங்கள் தெரு பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்படி அபராதம் போடாமல் கண்டித்து அனுப்பினால் கதைக்கு ஆவாது என்பது நடைமுறை உண்மை. இந்த ரூல்ஸ் தெரியாத நான் தொழுது விட்டு வரும்போது [ 5ம் வகுப்பு படிக்கும்போது ] எங்கள் தெரு சஹுர்தீன் கைதவறி போட்ட தஸ்பீஹ் மணியை எடுக்க ஹீரோ மாதிரி ஹவுலில் இறங்கி எடுக்க முக்குளித்து எழுந்தவுடன் என் கண்ணுக்கு தெரிந்த முதல் ஆள் வாட்ஸப்பை விட வேகமாக பஞ்சாயத்துக்கு தெரிவிக்க அந்த இரவே என் சார்பாக என் தாய் மாமா அவர்கள் 100 ரூபாய் அபராதம் கட்டி விட்டு ஆயிரம் ரூபாய்க்கு திட்டினார்கள். [ பணம் பெரிதல்ல….தாய் மாமா ஒரு பஞ்சாயத்தார் ..எங்கள் தெரு பஞ்சாயத்தில் கை கட்டி நின்று தான் அப்போது பதில் சொல்ல வேண்டும். ‘இவன் என்னை சபையிலெ கை கட்ட வச்சுட்டானே’ என்ற வார்த்தை மட்டும் அன்றைக்கு நான் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அசரீரி மாதிரி அடிக்கடி காதில் விழுந்தது. எனக்கு 10 வயது இருக்குமாகையால் இந்த விசயத்தின் சீரியஸ்னஸ் தெரியாமல் நாளைக்கு எங்கு பந்து விளையாடப்போகலாம் என்பதிலையே கவனம்.


எங்கள் தெருவில் அப்போது மிகவும் கட்டுக்கோப்பாகவும் , ஒற்றுமையாகவும் பல விசயங்கள் நடந்தது. தெருவின் குளத்தை தூர்வார எங்கள் தெரு ஆட்களே இறங்கி நின்று வேலை பார்த்தனர் . [ நானும் தான் ] ..யாரும் வரவில்லை என்றால் அபராதம். மற்றும் இந்த பள்ளியில் அதிக நாள் இமாமாக இருந்த அஹமது ஹாஜா லெப்பை அவர்கள் எனக்கு ஓதித்தந்த உஸ்தாத். அவரது உழைப்பும் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும்போது யாரையும் சாராமல் நடுநிலைமையாக பேசுவது மிகவும் சிறப்பாகவே இருக்கும். யாருக்காகவும் மார்க்கத்தை விட்டுத்தர மாட்டார்.
பள்ளிவாசலில் நோன்புக்கஞ்சியும், மற்ற விசயங்களுக்காக ஒன்று கூடி முடிவெடுப்பதும், பஞ்சாயத்தும் எப்போதும் மறக்க முடியாது.
பள்ளிவாசல் ஒழுக ஆரம்பித்தவுடன் 1991 ல் பள்ளிவாசல் கட்ட மனை போடப்பட்டது. பழைய பள்ளிவாசல் எங்களிடமிருந்து விடை பெற்றது.
புதிய பள்ளிவாசல் கட்ட நுங்கம்பாக்கத்தில் உள்ள அஷதுல்லா பாஷா எனும் எஞ்ஜினீயரை போய் பார்க்க எனது வாப்பா சொன்னார்கள். அப்போது இங்கு மலேசியாவில் உள்ள பள்ளிவாசல் ட்ராப்ட் ப்ளானை [ Taman Tun Dr Ismail Masjid , Kuala Lumpur ] எடுத்துக்கொண்டு கொட்டேசன் கேட்டேன். அவர் சொன்ன  தொகை எனக்கு லேசாக தலை சுற்றியது அப்போதைக்கு 4 கோடி ரூபாய் சொன்னார். 
பிறகு அதே ப்ளானில் சுருக்கி / வெட்டி இப்போதைக்கு உள்ள பள்ளிவாசல் முழுக்க முழுக்க எங்கள் தெருவாசிகளின் ஆதரவுடன் கட்டப்பட்டது. இதில் எங்கள் தெருவாசி அல்லாத ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டுமானால் ஜனாப். இக்பால் ஹாஜியார் அவர்களின் ஆரம்ப கால ஒத்துழைப்பு / உதவி மறக்க முடியாது.
இப்போதைக்கு உள்ள எங்கள் தெரு பள்ளிவாசல் திறப்பு விழாவை எங்கள் தெரு ஆட்கள் தன் வீட்டுத் தேவையை விட அதிக சிறத்தை எடுத்து வந்தவர்களை கவனித்து அனுப்பியதை மற்ற தெருவாசிகள் சொல்லக் கேள்விப்பட்டேன்.
இடையில் தெருவில் சில வருடங்கள் ஒற்றுமையில்லாத சூழல் ஏற்பட்டது. ஆனால் பள்ளிவாசல் என்று வந்தவுடன் எல்லோரும் ஒற்றுமையுடன் நடந்து கொண்டனர்.
பள்ளிவாசலில் காற்று வாங்க நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பழைய பள்ளிவாசல் மட்டும் அடிக்கடி “மோர்ஃபிங்’ கில் வந்து போகும்.
பள்ளிவாசல் என்பது வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. நம் வாழ்க்கையின் ஒரு அங்கம், தொழுகையை சுற்றி அன்றாட வேலைகளை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் உருப்படலாம்.

அதற்கு பள்ளிவாசல் மிகவும் உதவியாகவே இருக்கும்.


-ZAKIR HUSSAIN
-adirai nirubar

Advertisement

Close