தஞ்சை மாவட்டத்தில் பெண்கள் எண்ணிக்கை விகிதம் 1000க்கு 957 என குறைந்தது!

தஞ்சை மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழந்தைகளே உள்ளனர் என விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சை அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் தஞ்சை மற்றும் புதுச்சேரி கள விளம்பர அலுவலகங்கள் சார்பில் சிறப்பு மக்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கௌசல்யா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஸ் வரி, குபேந்திரன் முன்னி லை வகித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் குறித்து பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சீனிவாசன் பேசும்போது, சுத்தம் தான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. வீட்டில் கழிப்பறை இருப்பதே ஆரோக்கியத்துக்கான அடையாளம். மாநகராட்சி, நகராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்க முடியாது. 

கிராமங்களில் தான் இந்தப் பிரச்னை உள்ளது. மழைக் காலங்களில் மலம் நீரில் கலந்து நோய்களை உண்டாக்குகிறது. பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை பெண்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு தன்சுத்தம் போதிக்கப்பட வேண்டும். தனி நபர் கழிப்பறை கட்டத் தேவையான செலவை மத்திய, மாநில அரசுகள் மானியமாக தருகின்றன. எனவே வங்கி கடன் வாங்கி கழிப்பறை கட்ட வேண்டும் என்ற தேவையில்லை என்றார்.

வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கவிதா பேசும்போது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவிப்பது சட்டப்படி குற்றம். சொல்பவருக்கும் சிறைத்தண்டனை உண்டு. கேட்பவருக்கும் சிறைத் தண்டனை உண்டு. பெண் குழந்தைகளுக்காக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பெண் குழந்தைகளை நாம் பெருமையுடன் வளர்க்க முன் வர வேண்டும் என்றார்.

புதுச்சேரி கள விளம்பர அலுவலர் டாக்டர்.சிவக்குமார் பேசும்போது, 0-6 வயதுள்ள பெண் குழந்தைகள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகள் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இது 957 ஆக உள்ளது என்றார்.

நன்றி :தினகரன்

Advertisement

Close