மோசமான சாலை போட்ட ஒப்பந்ததாரர்களை வறுத்தெடுத்த பெண் கலெக்டர்!(வீடியோ இணைப்பு)

உத்திரப் பிரதேசத்தில் மோசமான சாலைப்பணிகள் மேற்கொண்ட அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளை பெண் கலெக்டர் சரமாரியாகக் கேள்வி கேட்டுத் திட்டி தலை குனிய வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலந்த்ஷர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சந்திரலேகா. இவர் சமீபத்தில்தான் மதுராவில் இருந்து புலந்த்ஷருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சமீபத்தில் பொறுப்பேற்ற அவர், அவரது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நடந்த கீழ்த்தரமான வேலை, தரமற்ற கட்டுமானப் பொருட்களைப் பார்த்து பொறுமையிழந்த அவர், அதிகாரிகளை ஆவேசமாக திட்டத் தொடங்கினார்.

மோசமாக வேலை செய்த ஒப்பந்ததாரர்களிடம், “இதுதான் நீங்கள் வேலை செய்யும் லட்சணமா? நீங்கள் செய்த காரியத்திற்காக வெட்கப்பட வேண்டும். நீங்கள் வீணாக்குவது உங்கள் பணமல்ல, அரசாங்கத்தின் பணம். நீங்கள் ஜெயிலுக்குத்தான் போகப் போகிறீர்கள்” என்றார்.

ஒரு மழைக்குக் கூடத் தாக்குப்பிடிக்காத சாலைகளை அமைக்கும் கேவலமான செயலையும் இன்னும் வேலையை தொடங்காத 10 ஒப்பந்ததாரர்களையும் அவர் குற்றம் சாட்டினார். 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் இவர் கேட்ட கேள்விக்கு பதில் பேச முடியாமல் கை கட்டி தலை குனிந்து நின்றனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பேச முயன்றபோது, “வாயை மூடு. எப்படி சாலை மோசமானது? பேப்பரில் புதிய செங்கற்கள் என்று சொல்லிவிட்டு பழைய கற்களை பயன்படுத்துகிறாயா? இன்னும் இரண்டு நாட்களில் புதிய செங்கற்களைக் கொண்டு வேலையை தொடங்கவில்லையென்றால் இனி எந்த ஒப்பந்தமும் கிடைக்காமல் செய்து விடுவேன்” என்றும் கலெக்டர் சந்திரகலா எச்சரித்தார்.

லட்சக்கணக்கான இந்தியர்களுக்காக குரல் கொடுத்த இவரது பேச்சு அடங்கிய வீடியோ யூ-டியூபில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இந்த வீடியோவை பல பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளத்தின் நாயகியாக மாறினார். அதிகாரியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவருக்கு ஆதரவு பெருகியபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close