DR.PIRAI-குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்கும் முறைகள்!

ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று ‘தலை’யாயப் பிரச்னை. காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளை விடுத்து, தற்போது தலைமுடிப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தும் பெரும்பாலான அழகுப் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், அந்த நேரத்தில், கூந்தல் அழகாக மின்னுமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது ஆபத்தாகவே முடியும். உதாரணத்துக்கு, ‘தலையில் எண்ணெயே தடவ வேண்டாம்… இந்த நான்ஸ்டிக்கி ஸ்ப்ரே போதும்… பளபளப்பு, மென்மை, கருமை என அலை அலையாய்க் கூந்தலில் வலம் வரலாம்’ என்பனபோன்ற விளம்பரங்கள் பலரையும் ஈர்க்கின்றன. சுருள்சுருளாக முடி இருப்பவர்கள், நேர்த்தியான நீள் முடியையும், நீளமான முடி இருப்பவர்கள் அலைஅலையாய்ச் சுருள் முடியையும், அதிக முடி இருப்பவர்கள் குறைவாகவும், குறைந்த முடி இருப்பவர்கள் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று ஏங்குகின்றனர். அனைவரின் ஏக்கத்தையும் போக்குவது இன்று மிகவும் சுலபம். ஆங்காங்கே இருக்கும் அழகு நிலையங்களில் இதற்கான அழகுச் சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அழகுக்கலை நிபுணர், தோல் சிகிச்சை நிபுணரைச் சந்திப்பது நல்லது.

இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.
முடிவு இல்லாப் பிரச்னையாக நீடிக்கும் முடிப் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். குழந்தையாக இருக்கும்போதே முடி வளர்ச்சிக்கான ஊட்டத்தைத் தருவதற்கும், முடியைப் பராமரித்துப் பாதுகாக்கவும் ஆர்.எம். ஹெர்பல்ஸ் உரிமையாளரும், இயற்கை அழகுக்கலை நிபுணருமான ராஜம் முரளி, பேஜ்-3 அழகு நிலையத்தின் முடி பராமரிப்பு நிபுணர்கள், மதன், அரவிந்த், கெவின் கேர் நிறுவனத்தின் தலை முடி மற்றும் சரும முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன் மற்றும் உணவியல் நிபுணர் சோஃபியா போன்ற வல்லுநர்கள் இங்கே வழிகாட்டுகிறார்கள்.

தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும்.  தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி…

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன.  ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது.  எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.  சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது.

 பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.  இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.  

 குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.  

 ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம்.  வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும்.  இதனால் முடி அடர்த்தியாக வளரும்.

  பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.  

 ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம்.  ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம்.  அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம்.  பயத்த மாவு எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும்.  கடலை மாவு சுத்தமாக்கும்.  தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

 குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது.  இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.  

 மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும்.  இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.  

 இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குத் தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்கூறு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும்.  இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம்.  பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம்.  இதனால் வியர்வை ஏற்படாமல், தலையும் வாசனையாக இருக்கும்.

  Advertisement

Close