அதிரையில் என்னை கண்டுக்கொள்ள ஆள் இல்லையா? கதறும் அதிரை நூலகம்!

 அதிரை-முத்துப்பேட்டை ஈ.சி.ஆர் சாலை பெட்ரோல் பங்கு எதிரில் கடந்த 21 ஆண்டுகளாக‌ அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்நூலகம் அரசால் 1993ம் ஆண்டு முதல் இன்று வரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் கதை, அறிவியல், இலக்கியம், விஞ்ஞானம், பொறியியல், கல்வி, வரலாறு, புவியியல், கணிதம், கணினி, ஆன்மிகம், மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் உள்ளன. மேலும் அரசால் அடிக்கடி புதிய புத்தகங்களும் இங்கு கொண்டுவரப்படுகின்றன. மேலும் இங்கு தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் மற்றும் புதிய தலைமுறை கல்வி போன்ற‌ வார மலர்களும் உள்ளன.

இதன் மேல் தளத்தில் படிப்பதற்க்கு வசதியாக காற்றோட்டமான படிப்பறை உள்ளது. மேலும் இதில் சுத்தமான கழிவறை வசதியும் உள்ளது. இந்நூலக வளாகம் நாள்தோறும் பணியாளர்களால் துப்பரவு செய்யப்படுகிறது. இந்நூலகத்தில் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் இதை படிக்க நாள் ஒன்றுக்கு சுமார் 5 நபர்கள் மட்டுமே வரும் நிலை வேதனையளிக்கிறது. இப்படி சகல வசதிகளையும் அரசு இந்நூலகத்திற்கு செய்தாலும் இதை படிக்க நமதூர் வாசிகள் வருவதில்லை. காலத்தின் சுழற்சியால் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் இந்த நூலகத்திற்கு மக்கள் வருவதை தடுக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலருக்கு இந்த நூலகம் அதிரையில் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

இது குறித்து இந்நூலகத்தில் நாள்தோரும் படிக்கும் அதிரையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் நம்மிடம் கூறுகையில் “இந்நூலகத்தில் ஏராளமான வசதிகள் உள்ளன. இங்கு அமர்ந்து படிக்க ஏதுவாக படிப்பறை வசதி உள்ளது. மேலும் இங்கு ரூபாய்.20 செலுத்தி உறுப்பினராகி புத்தகங்களை வீட்டிற்க்கு எடுத்து சென்று படித்து விட்டு திருப்பி கொடுத்துவிடலாம். பள்ளிகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடந்தால் மாணவர்கள் வருவார்கள். மற்றபடி இந்த நூலத்தின் பக்கம் யாரும் வருவதில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது” என்றார்.

இது குறித்து சிலர் கூறுகையில் இந்நூலகம் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக உள்ளதால் பொதுமக்கள் வருவதற்க்கு சிரமப்படுவதாக கூறுகின்றனர்.

இப்படியே நிலைமை சென்றுக்கொண்டிருந்தால் அதிரையில் வரும்காலங்களில்  இந்நூலகம் தொடருமா என்பது சந்தேகம்!!!!!

தொகுப்பு: அதிரை பிறை…..

Advertisement

Close