பேராவூரணியில் ஐஸ்கிரீமில் வெடி குண்டு!

ICE

பேராவூரணி அருகே ஐஸ்கிரீம் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாய் அதைக் கவ்வி வந்ததால் வெடிக்கும் முன் பயங்கர நாசவேலை முறியடிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ளது வீரியங்கோட்டை. இந்த பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் வேலுசாமி(45). இவரது வீட்டின் முன்புறம் குரோட்டன்ஸ் செடிகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு இவரது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய், டிவி ரிமோட்டை கவ்விக்கொண்டு வெளியே ஓடியது. வேலுசாமியின் மகன் நாயை துரத்தி வந்தார். அப்போது அந்த நாய் குரோட்டன்ஸ் செடிகள் நடுவே போய் ரிமோட்டை போட்டுவிட்டு அங்கு கிடந்த ஒரு பிளாஸ்டிக் பந்தை( ஐஸ்கிரீம் விற்பனைக்காக இப்படிப்பட்ட பந்து தயாரித்து அதில் ஐஸ்கிரீம் வைத்து விற்கப்படுகிறது) கவ்விக்கொண்டு ஓடிவந்தது. அதைப்பாரத்த வேலுசாமி அந்த பந்து வித்தியாசமாக இருப்பதால் நாயிடம் இருந்து அதை வாங்கி பார்த்தார்.

அந்த பிளாஸ்டிக் பந்து வழக்கத்தை விட கனமாக இருந்தது. அத்துடன் அந்த பந்தின் ஒரு பகுதியில் ஒரு குழாய் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. பந்து வித்தியாசமாக இருந்ததால், வேலுசாமி பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது அது வெடிகுண்டு என தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து அதை பரிசோதித்ததில் இந்த வெடிகுண்டு புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. வழக்கமாக நாட்டு வெடிகுண்டு, துணி, சணல் கயிறுகளில் இரும்பு ஆணி, குண்டூசிகள், துண்டு பிளேடுகள் மற்றும் வெடிமருந்து வைத்து உருவாக்கி இருப்பார்கள். இந்த குண்டுகளை வீசினால் தான் வெடிக்கும். ஆனால் இந்த வெடிகுண்டு, வெளிப்புற உஷ்ணத்தில் சூடு ஏறியவுடன் தானாக வெடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதற்காக உள்ளே காற்று செல்லும் வகையில் வெடிகுண்டில் குழாய் வைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இந்த தொழில்நுட்பத்தில் யாரும் குண்டு தயாரித்ததாக போலீசாருக்கு தகவல் இல்லை. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம் குண்டு போலீசாருக்கே சவாலாக உள்ளது. இதை யார் உருவாக்கினார்கள், ஏன் பஞ்சாயத்து தலைவர் வீட்டு முன் கொண்டு வந்து போட்டார்கள் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து பேராவூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகப்பணிகள் தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு வருவதால்,  போலீசார் இன்னும் இந்த வெடிகுண்டு பற்றி வழக்குப்பதிவு செய்யவில்லை. இன்று பிற்பகலில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது.  புதிய தொழில்நுட்ப ஐஸ்கிரீம் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதும், பெரும் சதி முறியடிக்கப்பட்டதும் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-dinakaran

Close