ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு இழுக்கும் இளைஞர்கள் .

download (2)உணர்ச்சிப் பூர்வமான தொண்டர்களால் காலம் காலமாக வளர்க்கப்பட்டு…. அதனால் விருட்சமாக வளர்ந்து நிற்கும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அரசியல் களம்…. என்கிற வரலாற்றை அதிரடியாக மாற்றிக் காட்டியவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்திய திருநாட்டின் தலைநகரான டெல்லியில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து ஆட்சி பீடத்தை அலங்கரித்து வந்தது. பா.ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு பின்னர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்– பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

அப்போது ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் இயக்கம் தீவிரம் அடைந்து காணப்பட்டது. இந்த நேரத்தில் அவருக்கு பின்னால் தொண்டர்களோடு தொண்டராக அணிவகுத்து நின்றவர்தான் கெஜ்ரிவால்.

ஹசாரே அரசியலுக்கு வர தயக்கம் காட்டிய நிலையில், கெஜ்ரிவால் அதிரடியாக டெல்லி அரசியல் களத்தில் குதித்தார். ஆம்ஆத்மி (சாமானிய மக்களின் கட்சி) என்ற பெயரில் புது கட்சியை தொடங்கிய அவர் துடைப்பத்தையே கட்சியின் சின்னமாக தேர்வு செய்தார். புரையோடிக்கிடக்கும் ஊழலை துடைப்பத்தால் துடைத்து எடுக்கப்போகிறேன் என்கிற இவரது ஆவேசக் குரல்… தலைநகரையே திரும்பி பார்க்க செய்தது.

தேர்தலில் பா.ஜனதா காங்கிரசுக்கு கடும் போட்டியை கொடுப்பார் என்றே எதிர் பார்க்கப்பட்ட கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக அரியணையில் அமர்ந்தார். மக்கள் மனதில் இடம்பிடிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும், அரசியல் அரியணையும் கிடைத்தே தீரும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் கெஜ்ரிவால் என்றால் அது மிகையாகாது. மத்திய அரசு பணியில் அதிகாரி அந்தஸ்தில் இருந்த கெஜ்ரிவால், அரசியல் பயணத்துக்காக அப்பணியையே தைரியமாக உதறிவிட்டே வந்தார்.

அந்த வழியை பின்பற்றி தமிழகத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு இழுத்து வருவதற்காக இளைஞர்கள் அணி திரண்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் என்றதுமே… நம் நினைவுக்கு வருவது மதுரை கிரானைட் முறைகேடுகளும்… அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த அதிரடி சோதனைகளும்தான்… மதுரை கலெக்டராக இருந்த சகாயம் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அங்கிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டு கிரானைட் தொடர்பான வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக அவரை நியமித்தது. இதன் பின்னர் சகாயம் நடத்திய வேட்டையில் தோண்ட… தோண்ட புதையல் வந்தது போல முறைகேடுகளும் வெளியில் வந்துகொண்டே இருந்தன. இதற்காக அவர் சந்தித்த இடர்பாடுகள் ஏராளம்.

கிரானைட் நரபலி விஷயத்தை வெளியில் கொண்டு வருவதற்காக ஒருநாள் இரவு முழுக்க ‘சுடுகாட்டிலேயே சகாயம் காத்துக்கிடந்ததே இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும். இதனைப் போன்று தனது அரசாங்க பணியில் தொடர்ந்து இம்மி அளவும் பிசகாமல் நேர்மையை கடை பிடித்து வருபவர் இவர்.

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருஞ்சுனை என்கிற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த சகாயம் படிப்படியாக உயர்ந்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். பின்னர், நீலகிரி மாவட்டம் கூடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

தனது பணியில் எப்போதுமே நேர்மையையும், துணிச்சலையும் கடைபிடித்து வந்துள்ள சகாயம், “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என்கிற வாசகத்தையே தனது தாரக மந்திரமாக கொண்டு செயலாற்றி வந்துள்ளார். இதுவே இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் மக்களின் மனதில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.

சென்னையில் கோ–ஆப்டெக்ஸ் துறையில் இயக்குனராக பணியாற்றிய போது, தனது செயல்பாட்டால் கதர் துறையில் விற்பனையை அதிகரிக்கச் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணியும் பழக்கத்துக்கு உயிரூட்டினார். இதன் பின்னர் அலுவலகங்களுக்கும் பலர் வேட்டி அணிந்து செல்ல தொடங்கினர். சேலை அணியும் வழக்கத்தையும் ஊக்கப்படுத்தி பெண்களின் நாகரீக உடை மோகத்துக்கும் கொஞ்சம் முற்றுப்புள்ளி வைத்தார். பணியின்போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது அதிகாரத்தை தவறாகவோ.. யாருக்கும் வளைந்து கொடுத்தோ பணியாற்றியதில்லை என்பதே சகாயத்தின் சிறப்பாகும்.

இதுவே இளைஞர்களின் இதயத்திலும் அவரை இடம்பிடிக்கச் செய்துள்ளது என்றே கூறலாம்.

இதன் தொடர்ச்சியாக இளைஞர் இயக்கமாக மாறி இருப்பதுதான் “சகாயம் 2016” அமைப்பு.

“இனியொரு விதி செய்வோம். தமிழகத்தை தலை நிமிர செய்வோம்” என்கிற கோஷத்துடன், இளைஞர்களும், பல்வேறு சமூக அமைப்பினரும் ஒன்றிணைந்து சகாயத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இந்த அமைப்பினர் அரசியல் மாற்றத்துக்கான மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு என்கிற பெயரில், முக்கிய நகரங்களில் ஆதரவு திரட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு சகாயம் முதல்வராக தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுரையில் புத்தாண்டில் (ஜனவரி 3–ந்தேதி) வண்டியூர் வட்டச்சாலை பகுதியில் அடுத்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதே நமது நோக்கமாகும்… இளைஞர் எழுச்சி இயக்கத்தினை வழிநடத்துவதற்கு ஓய்வுபெற்ற நேர்மை மிகு அதிகாரிகளை வரவேற்கிறோம். புறப்படு இளைஞனே… புதிய சரித்திரம் படைப்போம் என்பது போன்ற வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த அழைப்பிதழ்களில், கனவு காண…. இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த அப்துல்கலாம் படமும், சகாயம் படமும் இடம் பெற்றுள்ளன.

2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்கிற கனவுகளுடனேயே இந்த இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர். அவர்களின் கனவு மெய்ப்படுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Close