அமெரிக்காவில் பனிப் பொழிவு: 18 பேர் பலி!

carஅமெரிக்காவில் கடந்த இரு நாட்களாகப் பெய்து வரும் கடும் பனிப் பொழிவுக்கு 18 பேர் பலியாகினர்.அந்த நாட்டின் கிழக்கு கடற்கரையோர மாகாணங்கள் அனைத்தும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்டன.85 லட்சம் பேர் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தலைநகர் வாஷிங்டனில் சனிக்கிழமை 60 செ.மீ. பனிப் பொழிவு பதிவு செய்யப்பட்டது. சாலைகள் பெரும் பனிப் போர்வையால் மூடப்பட்டு வாகனப் போக்குவரத்து தடைபட்ட நிலையில், நகர வீதிகளில் பனிச்சறுக்கில் பயன்படுத்தும் கருவிகள் மூலம் பலர் செல்வதைக் காண முடிந்தது.

பனிப் பொழிவுக்கு 18 பேர் பலியானதாக செய்தித் தொலைக்காட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாகாணங்களில் பனியில் சிக்கி ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்ந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.முக்கியத்துவம் வாய்ந்த பென்சில்வேனியா நெடுஞ்சாலையில் சரக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 24 மணி நேரமாக நகர முடியாமல் முடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலையில் நிலை சீரடைந்தது என்று சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது.அடுத்த 24 மணி நேரத்துக்கு தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் பலத்த பனிப் பொழிவு இருக்கும் என்று வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.

வாஷிங்டனில் சனி, ஞாயிறு மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நியூயார்க்கில் பாதாள மெட்ரோ மட்டும் இயக்கப்படுகிறது. சாலைகளில் தனியார் வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மேயர் பில் டிபிளாசியோ உத்தரவிட்டார்.பனி அகற்றும் இயந்திரங்கள் மூலம் சாலையில் குவிந்துள்ள பனி அகற்றப்பட்டு வருகிறது. அவசர உதவிக்குச் செல்லும் ஆம்புலன்ஸ், காவல் துறை வாகனங்கள் மட்டுமே சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பத்து மாகாணங்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வரையில் 6,000 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.அடுத்த இரண்டு நாட்களுக்கு கிழக்கு மாகாணங்களில் விமான சேவைகள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் அந்த நாட்டின் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.நியூஜெர்ஸி மாகாணம், நார்த் வைல்ட்வுட் நகரில் பெய்த பலத்த மழையில் நகரில் பல இடங்கள் நீரில் மூழ்கின. பொதுமக்கள் வீடுகலை விட்டு வெளியேற வேண்டாம் என ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி:தினமணி

Close