இனிக்கும் இல்லறம் – 3

இன்று நகரங்கள் தோறும் கவுன்சிலிங் சென்டர்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கணவன்-மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் இத்தகைய மையங்கள் ஆங்காங்கே தோன்றிய பிறகும் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை. தீர்வு வழங்குவதும், ஆலோசனை கூறுவதும் எளிதானது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கலே எழுகிறது.
தம்பதியர் இடையே மனமாற்றம் நிகழாமல் எத்தனை கவுன்சிலிங் சென்டர்களுக்கு சென்று ஆலோசனை பெற்றாலும் இல்லற வாழ்க்கையில் எந்த மாற்றமும் உருவாகாது.
கவுன்சிலிங் சென்டருக்கு மனவள ஆலோசனை பெறப்போகும் கணவன்-மனைவி இருவரும் மனவளவாளருக்கு (கவுன்சலர்)முன்னால் ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இருவரும் தங்களுடைய கருத்திலேயே உறுதியாக இருந்துகொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மையை கைகழுவுகின்றனர். பின்னர் ஏன் இவர்கள் கவுன்சிலிங் சென்டர்களுக்கு செல்கின்றார்கள்?
வேறொன்றுமில்லை தங்களின் கருத்திற்கு ஒரு endorsement(ஒப்புதலை) பெறவேண்டும் என்பதுதானே தவிர பிரச்சனைக்கு தீர்வு கண்டு இல்லற வாழ்க்கையை சுமூகமாக கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
முதல்கட்டம் – புதுமணத் தம்பதிகள்
உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் தம்பதியினர் இருவருக்கிடையே அதிக அளவிலான ஈர்ப்பு உருவாகும் காலக்கட்டம். இங்கு தனது துணையின் நல்லவை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். நெகட்டிவான எந்த குணங்களும் பொருட்படுத்தப்பட மாட்டாது. இருவரும் ஒருவரையொருவர் பிரிந்திருக்க முடியாத இக்காலககட்டத்தில் அவர்களிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். தனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமான நபர் தனக்கு துணையாக கிடைத்திருக்கிறார் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். ஆனந்தத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் முதல் கட்டத்தின் ஆயுள் ஒரு சில மாதங்களே!
இரண்டாவது கட்டம் – ஆத்ம பந்தம்
உடல் ரீதியான ஈர்ப்பின் சக்தி குறையும் வேளையில் தம்பதியினர் இடையேயான ஆத்ம பந்தத்தின் நெருக்கம் சற்று அதிகமாக இக்காலக்கட்டத்தில் வெளிப்படும். இது இயல்பாகவே ஏற்படும் ஒருநிகழ்வு. சாதாரணமாக இல்லற வாழ்க்கையில் முதல் வருடத்திலேயே இக்காலக்கட்டம் உருவாகியிருக்கும். ஆனால், தம்பதிகள் இடையே இந்த ஆத்ம பந்தம் உருவாகவில்லை எனில் அது இல்லற வாழ்க்கையின் தோல்வியாகவே அமையும்.
மூன்றாவது கட்டம் – பொறுப்புணர்ச்சி
வாழ்க்கையை குறித்த ஆழமான சிந்தனையின் பலனாக குடும்ப உறவின் முக்கியத்துவத்தை தம்பதிகள் இருவரும் பரஸ்பர புரிந்துக்கொள்ளும் கட்டம். அத்துடன் பரஸ்பரம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
ஓர்தாயின் கடமை என்ன? ஒரு தந்தையின் பொறுப்புக்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ளும் பொறுப்புணர்ச்சி இக்காலக்கட்டத்தில் உருவாகும். இத்தகையதொரு சூழல் உருவானால் வாழ்க்கை என்பது அமைதியான நதியில் செல்லும் ஓடம் போல சுமூகமாக பயணிக்கும்.
மேற்கண்ட 3 கட்டங்களைத் தாண்டும் வேளையில் இயல்பாகவே பல பிரச்சனைகளையும், சிக்கல்களையும் நாம் சந்திக்கவேண்டி வரும். பரஸ்பர நம்பிக்கையும், புரிந்துணர்வும் இழக்கும் சூழலும் உருவாகலாம். ஊடலும், கூடலும் வாழ்க்கையில் சகஜம் என்பார்கள்.
கணவன்-மனைவியிடையே பிரச்சனைகள் உருவாகும் வேளையில் மூன்றாவது நபரின் தலையீடு அவசியமாகும். இருவரின் நிலையை புரிந்துகொண்டு ஆறுதல் படுத்தும் தன்மையும், இல்லற வாழ்க்கை சீர்குலைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணமும் அந்த மூன்றாவது நபருக்கு அவசியம் தேவை.மூன்றாவது நபரின்தலையீடு இல்லையெனில் தம்பதியினர் இடையே ஈகோ வளர்ந்து இறுதியில் குடும்ப நீதிமன்றத்தையோ அல்லது ஊர் ஜமாஅத்தையோ விவகாரத்திற்காக அணுகும் சூழல் உருவாகும்.
கணவன்-மனைவி இடையே இல்லற வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய சில குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கலாம்

Advertisement

Close