Adirai pirai
posts

மனிதம் கொண்ட மனிதன் வேண்டும்! – ஆரூர் யூசுப்தீன்

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
மார்தட்டி கொண்டிருக்கும் நம் நாட்டில் நடக்கும் நிகழ்வினை பார்க்கும்
போழுது , நாம் ஜனநாயக் நாட்டில் தான் வாழ்கின்றோமா என  ஐயம் ஏற்படுகிறது.
இசுலாமியர்கள்  தீவிரவாதி என்று அவதூறு
செய்தியை பரப்புரை செய்யாமல் எந்த நாளேடுகளும் இல்லை . பொய் பரப்புரைகலால்
அநேக  இசுலாமியர்களும் அந்த செய்திகளை நம்புகின்றனர்.
ஒருகாலத்தில் பெரும்பாலான மக்கள் பிற
மக்களிடம் மதங்களை பார்த்ததில்லை. ஆனால் சில நபர்களின் மததுவேச செயல்களால்
தற்பொழுது அந்த நிலை  மாற்றப்பட்டுள்ளது.  இன்று மதங்களில் உள்ள
வேறுபாடுகளை கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்ப்படுத்தி அரசியல் செய்யும்
அரசியல்வாதிகள் தான் ஆட்சிக் கட்டிலை பிடிக்கின்றனர். அப்படி பிடித்த
ஆட்சியை தக்கவைக்க அவ்வப்பொழுது சிறு சிறு கலவரத்தை கட்டவிழ்த்து
விடுவார்கள்.
சில சமயங்களில் ஒரு மதத்தின் அல்லது
இனத்தின் அல்லது போராட்ட குழுவின்  கொள்கைகளையும் கோட்பாடுகளையும்
தெரியாமல் அதை பற்றி  தவறாக புரிந்து கொண்டு அவதூறு பிரச்சாரம் செய்யும்
நபர்களும் இந்த நாட்டில் உண்டு. இந்த செயல்களினால் கோபம் கொண்ட நபர்களில்
ஆயுதம் ஏந்துபவரும் உண்டு. அகிம்சையை கையாள்பவரும் உண்டு.
பிற மதங்களின் அடையாளத்தை பற்றிய விஷம
கருத்தை பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து அதை மக்களின் மனதில் தவறான
கருத்தை கலக்கின்றனர். இன்று நகரங்களில் படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவனை
அழைத்து தீவிரவாதியின் புகைப்படத்தை வரைந்து காட்டு என்று சொன்னால் அவன்
இசுலாமியனின் தோற்றத்தை தான் வரைவான். நாம் சொல்வது, படிப்பவர்களுக்கு
உண்ர்ச்சியியை தூண்டுவதற்கு அல்ல. இது நடந்த நிகழ்வே.
தங்களுடையே மதத்தில் தங்களுக்கு சரியான
மரியாதை கிடைக்காத  நிலை தொடர்ந்து இருப்பதால் தங்களுக்கு பிடித்த மதத்தை
தேர்ந்தெடுத்து  அதில் மாறுகின்றனர் . இதை
இழிவாக  விமர்சிக்கின்றனர் . இந்நாட்டில் தான் சார்ந்த
மதத்தினை  பிரச்சாரம் செய்யவும், மதம் மாறுவதும் தடை செய்யப்பட்டது அல்ல.
அதையும் தடை செய்ய பாசிச சக்திகள் செயல்பட்டுகொண்டிருக்கிறது. இது
இந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது.
கிருத்துவ பாதரியார்கள் பலர்  இவர்களினால்
தாக்கப்படுள்ளனர். பல தேவாலயங்கள் சேதமடைந்துள்ளது . 400 ஆண்டு தொழுகை
நடத்திய இசுலாமியர்களின் பாபரி பள்ளியை இடித்து தரைமட்டம் செய்த மத துவேஷ
குழுக்கள் இன்னும் இந்த நாட்டில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அதன்
மூலம் ஆட்சி செய்யும் என்ற கொள்கையை மையப்படுத்தி செயல்படுத்துகின்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாபரி
பள்ளி இடிப்பு பற்றிய கவிதை என் சிந்தனையில் வந்து
செல்கிறது அது “கடவுளின் கோயிலுக்காகவா கடவுளின் பள்ளிவாசலை இடித்தீர்கள்”
என்று கூறுவார்.
இத்தனையும் கடந்து  இவர்கள் மத்தியில்
ஒற்றுமையாக வாழ்வது நமக்கு எதிரில் இருக்கும் மிகப்பெரிய சவால். மதங்களை
கடந்த மனிதன் தான் இதனை வெற்றி கொள்கிறான்.


அனைத்து மதங்களிடையே உள்ள வேற்றுமையை
கலைந்து, ஒற்றுமையை கொண்டு இணைந்து வாழ்வது தான் நல்லது. அது தான் ஜனநாயக
நாட்டிற்கு ஆரோக்கியமானது. அனைத்து மதங்களிலும் அன்பையும் சமத்துவத்தையும்
போதிக்கையில்  பின் ஏன் இந்த இடைவேளி?
எல்லையற்ற நீதி, நீதியுடனான  சுதந்திரம், பாரபட்சமில்லத சமத்துவம், சமத்துவத்துடன் சகோதரத்துவம், ஏற்றதாழ்வற்ற பொருளாதாரம்,  பொருளாதாரத்தை மிகைக்கும் மனிதம், மனிதம் கொண்ட மனிதன், இவற்றுடனான வாழ்வே இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்விற்கும் ஏற்றது.

ஆக்கம்: ஆரூர்.யூசுப்தீன்

 

 

Advertisement