Adirai pirai
posts

அதிரை சிறுவர்களின் பெட்டிக்கடை வியாபாரம்!

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம்
ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும்
விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து
கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி
முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து நடத்திய கடைகளும் அதில் இடம் பெற்ற
விற்பனைப்பொருட்களும் (நீங்களெல்லாம் பெரும், பெரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று
மேலாளராகவோ, மேற்பார்வையாளராகவோ பணி செய்து வருவதால் அவற்றையெல்லாம் முற்றிலும்
மறந்திருப்பீர்கள். அதனால் அவை இங்கு கொஞ்சம் ஞாபகப்படுத்தப்படுகிறது) நம்
நினைவுகளில் டெமரேஜ் ஏதும் தராமல் நிரந்தமாய் தஞ்சமடைந்துள்ளன.
(லிஸ்டெ
போட்ற வேண்டியது தான்)
1. கல்கோனா
2. கடலை மிட்டாய்
3. மஞ்ச கலரு கொடலு
4. தேன் முட்டாயி
5. பால் பன்னு
6. மைசூர் பாக்கு (அப்பொ கரிங்கல்லு மாதிரி
இருக்கும். மன்சூராக்க கோவிச்சிக்கிடாதிய)
7. கொத்து மாங்கா (தோப்லேர்ந்து பறிச்சதுனால
கூடுதல் லாபம் கிடைக்கும்)
8. மோரு (கருவாப்பிள்ளை, பச்ச மொளவா, கொத்து
மாங்கா, கடுகு போட்டு தாளிச்சது)
9. சர்வத்து (ஜம்ஜா விதை ஊற வைத்து, ரோஸ் கலரு
பாவு காச்சி வித்தாலும் ஐஸ் போட்டு விக்கிற அளவுக்கு வசதி இல்லை)
இன்னும் இங்கு விடுபட்ட விற்பனை பொருட்களை
நீங்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்.
நாளாக, நாளாக விற்பனை நன்கு சூடு பிடிக்கும்.
பெரிய பசங்க சிலர் நம் கடையின் (அலங்கோலத்தை பார்த்து) சூழ்நிலையை பார்த்து இரக்கப்பட்டு
(மொகத்தாச்சனைக்காக) நம் கடையில் ஏதேனும் வாங்கிச்செல்வர்.
பள்ளி திறக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்னர்
இந்த கூட்டாண்மை வியாபாரம் வரவு, செலவுகள் போக கணக்கு பார்க்கப்பட்டு
முதலீட்டிற்கு தகுந்தாற்போல் (ரூபாய் 20 அல்லது 30க்குள்) லாபம் பிரித்து கொடுக்கப்படும்
அல்லது எடுக்கப்படும். (வருமான வரி பயமோ, ஆடிட்டிங் தொல்லையோ, பணியாளர் சம்பள
பிரச்சினையோ இங்கில்லை).
இந்த மாதிரி வியாபாரம் நாம் எஸனல் குர்’ஆன்
ஓதப்போகும் வீட்டுப்பள்ளிகளிலும் அந்த ஒஸ்தார் மூலமே நடத்தப்பட்டது. என்ன செய்வது?
அப்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கு இது போன்ற சிறு வருமானங்கள் கொஞ்சம்
வீட்டுத்தேவைகளுக்கும் தோள் கொடுத்து உதவியது. இப்பொழுதுள்ள விலைவாசி, பொருளாதார
சூழ்நிலைக்கு இதுபோன்ற வியாபாரங்களும், அதன் வருவாயும் வீட்டு கொல்லையில் மேயும்
கோழிகளுக்கு தவுடு வாங்கி கொழச்சி வக்க கூட பத்தாது.
இதுபோல் நாம் சிறு பிராயத்தில் தொடங்கிய கடைகள்
இப்பொழுது அதை நினைத்துப்பார்க்க சிலருக்கு வெட்கமாகவும், கொஞ்சம் கேவலமாகவும்
(அரீர்ப்பாகவும்) கூட தெரியலாம். ஆனால் அன்று அது போல் கடை வைத்து தன்
வாழ்க்கையில் வியாபாரம் என்றால் என்னவென ஆரம்பித்தவர்களில் பலர் இன்று அல்லாஹ்வின்
கிருபையால் அல்ஹம்துலில்லாஹ் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை
பெற்றும், சிலர் அரபுலகத்திலும் குடும்பத்துடன் நல்ல சூழ்நிலையில் இருந்து
வருகின்றனர்.
இப்பொ உள்ள புள்ளையல்வோ ஊட்டு வாசல்ல ஒரு கடை
கட்டி மினி சூப்பர் மார்க்கெட்டு மாதிரி வச்சி குடுத்தாலும் அங்கு உக்காந்து
வியாபாரம் செய்ய வெக்கப்படுதுவோ, கூச்சப்படுதுவோ. ஆனா வெளிநாடுகளில் கவராலு
போட்டுக்கிட்டு வேவா வெயில்ல நின்டு வேல பாக்க மட்டும் எவ்வித கூச்சமும்
படுறதில்லை.
இந்த கட்டுரை எழுத காரணம், சகோ அர.அல அவர்கள்
இன்று முகப்புத்தகத்தில் இணைத்திருந்த இந்த அரிய புகைப்படமே காரணம். கொட்டகைக்குள்
5 பாட்டில்களும், 5 முதலாளிகளும் நமக்கெல்லாம் இங்கு ஃபோஸ் கொடுத்து ஏதோ
சொல்லவர்ராங்க. கேட்டுக்கிடுங்க…..
தம்பி, உச்சி உரும நேரத்துல மசக்கமா வருது ஒரு
சர்வத்து கலக்கி குடும்மா…..
இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்திப்பில் சந்திப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது

நன்றி: அதிரை நிருபர்


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்