பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.28 குறைப்பு ! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது !

 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.  நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. சென்னையில் வரிகள்  உள்பட லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, பெட்ரோல்  விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய  அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. அரசு பொதுத்துறை எண்ணெய்  நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வரை டீசல் விலையை  மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த 2013, ஜனவரியில்  கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை  தொடர்ந்து சரிந்து வருகிறது. 

இதனால் எண்ணெய் நிறுவனங்கள்,  இழப்பு ஈடுகட்டப்பட்டு லாபம் ஈட்ட  தொடங்கியுள்ளன. இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு  ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வாட் வரிகளுடன் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.1.21 குறைந்து ரூ.66.65 ஆக இருக்கும். சென்னையில் ரூ.1.28  குறைந்து ரூ.69.59 ஆக இருக்கும். இதுபோல், டீசல் விலை  குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என தெரிகிறது.

Advertisement

Close