Adirai pirai
posts

பெண் குழந்தையும் ! எதிர்கால சந்ததியும் ! (அதிரை உபயா அவர்களின் சிறப்பு கட்டுரை)


இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினமாம். பெண் குழந்தைகளை பெற்று அதை கண்ணியமாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்கள் சுலபமாக சுவர்க்கத்துக்கு செல்வதற்கான வழி என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

பெண் குழந்தை என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் குழந்தையின் கல்வி ஒரு குடும்பத்திற்கான கல்வி.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்னும் பழமொழிக்கேற்ப குழந்தை பருவத்திலிருந்தே கண்ணியத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையோ மேல்நாட்டு மோகத்தில் .இன்றைய கலாச்சாரம் என்ற பெயரில் நடையிலும்,உடையிலும்,பேச்சிலும்,செயலிலும் கற்று கொடுக்கிறோம். 

இதனாலேயே பிஞ்சு மனத்தில் பதிந்த பசுமரத்து ஆணியாக பருவம் எய்திய அறியா வயதிலேயே காதல் என்னும் பெயரில் சிக்கி சீரழிவதையும் அதைவிட கொடுமையாக கற்பிழந்தும் போவதை கண்ணுக்கெதிரேயே இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். 

ஏன் இப்படி? என ஆராய்ந்தால் வளர்ப்பின் அடிப்படை சரியில்லையென்றே விடை கிடைக்கும். 

இன்னும் சில கேடுகெட்ட தாய்மார்கள் தன் குழந்தையை தொலைக்காட்சி புகழுக்காக குத்து பாட்டுக்கு அசிங்கமான பாவனைகளோடு ஆட வைத்து பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இதுவல்லாத மற்ற மற்ற போட்டிகளிலும் முன்னனியில் வர வீட்டில் அடித்து துன்புறுத்தி பயிற்சி கொடுக்க படுவதை ஒரு தொலைகாட்சியில் மேடையிலேயே ஒரு குழந்தை சொல்லி அழுதது கண்ணீரை வரவழைப்பதாய் இருந்தது.

அடுத்து இன்று பெண் குழந்தை தினத்தையொட்டி யாராவது ஒருவராவது திருமணமாகாதவர்கள் வரதட்சனை வாங்கவே மாட்டேன் என்றும் திருமணமானவர்கள் என் மகனுக்கு வரதட்சனை வாங்க மாட்டேன் என்றும் அப்படி நான் வாங்கிய வரதட்சனையை திருப்பி அவர்களிடமே ஒப்படைத்துவிடுவேன் என எவராவது சபதமேற்று பதிவிட்டிக்கிறார்களா என தேடி பார்த்தேன் என் 5000 த்திற்கும் மேற்பட்ட நண்பர்களிலும்,பின்தொடர்பவர்களிலும். அப்படி ஒன்றுகூட கண்ணில்படவில்லை.
இன்று பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அது நாளை பருவமெய்திய பிறகு கல்யாண சந்தையில் வரதட்சனை கொடுத்து மாப்பிள்ளை மாட்டை வாங்க வசதியில்லாததால் முதிர் கன்னிகளாக இருக்கும் தன் மகள்களை பார்த்து பெற்றவர்கள் தினம் தினம் படும் துயரம் கொடுமையிலும் கொடுமை.

இதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாளை நம் மகளுக்கும் இவ்வாறு நேரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

வரதட்சனை என்பது பிச்சை காசு. சொந்தமாய் சம்பாரிக்க துப்பில்லாதவனின் ஈனபுத்தி என்பதையும் மனதில் கொள்வோம். 

என் இரு மகன்களுக்கும் (ரோஷன் அஷ்ரஃப் ,ஹசன் முஷ்ரஃப்) இதை சொல்லிகொடுத்தே வளர்ப்பேன். எக்காரணத்திலும் அவர்களின் திருமணத்தில் வரதட்சனையே வாங்கமாட்டேன் என சபதமேற்கிறேன்.

“பெண் குழந்தைக்கு சீர்மிகு கல்வியோடு பேணி வளர்ப்போம்.
ஒரு பெண் குழந்தைக்கு நாம் கொடுக்கும் அறிவு ஒரு பரம்பரைக்கே கொடுக்கும் அறிவு.
பெண் குழந்தை பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்”.


ஆக்கம்: அதிரை உபயா (எ) உபயதுல்லா
  

Advertisement