காவல்துறை உண்மையில் நம் நண்பன் தான் ! அது எங்கே? (அதிரை உபயா அவர்களின் கட்டுரை)

சில நாட்களுக்கு முன்பு இன்டர்நெட் சிம் வாங்க தம்மாம் (சவுதி அரேபியா) சீக்கோ பகுதியில் அமைந்த ஒரு கடைக்கு சென்றிருந்தேன். கடை வாசலில் 10 GP சிம்மின் விலையும் 6 மாத காலம் வேலிடிட்டியும் எழுதி இருந்தது. அதை பற்றி விசாரித்து அதற்குண்டான தொகை கொடுத்து சிம் வாங்கினேன்.

6 மாதத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பில்லில் சிம் நம்பரை குறித்து எழுதி கேட்டேன். (காரணம் என் நண்பர்களில் சிலர் இவ்வாறு வாங்கிய சிம் 4 மாதத்திற்குள்ளாகவே மூன்று, நான்கு GP பேலன்ஸ் இருந்தும் சிம் தொடர்பு துண்டிக்கபட்டது.)

பில் கேட்டவுடன் அக்கடையில் இருந்த எகிப்து நாட்டவர் திருதிருவென விழித்து அப்படி எழுதி தர முடியாது என்றார். இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது. முடிவில் பில் தராவிட்டால் சிம் வேண்டாம் என திருப்பி கொடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் பணம் திரும்ப தரமுடியாது என அறுதியாக கூறிவிட்டார். எவ்வளவு சொல்லியும் பில்லோ, கொடுத்த தொகையோ திரும்ப தருவதாக இல்லை.

எகிப்து நாட்டவர்களுக்கேயுண்டான பிடிவாத குணம் வெளிப்பட்டது. நான் விடுவேனா இந்தியன் (அதிராம்பட்டினம்) ஆயிற்றே. உடனே காவல்துறை உங்கள் நண்பன் என ஊரில் எழுதி (மட்டும்) இருப்பது ஞாபகம் வரவே எடுத்தேன் தொலைபேசியை, அழைத்தேன் காவல்துறையை.

அடுத்த பத்து நிமிடத்திற்குள்! ஒரு சவூதி காவலர் வாகனத்தில் வந்தார். வந்தவர் ஸலாம் கூறி “கை குலுக்கினார்”. அழைத்ததன் காரணத்தையும், விவரத்தை கேட்டறிந்தார். நியாயம் என் பக்கம் இருக்கவே கடைக்காரரை அழைத்து அந்த சிம் நம்பரையும், கால அளவையும் இன்றைய தேதியையும் குறித்து என்னிடம் கொடுக்க கூறிவிட்டு இனி இதுபோன்ற புகார் மறுமுறை வந்தால் கடை மூட வேண்டியும், கைதும் செய்ய வேண்டி வரும் என கடைக்காரரான எகிப்து நாட்டவரை எச்சரித்தார்.

பின்னர் காவலர் என்னிடம் அவர் பெயரை கூறிவிட்டு சிம்மில் (நான் பயந்தது போல்) ஏதாவது பிரச்சனையென்றால் நான் பொறுப்பு. என்னிடம் கூறுங்கள் என்று மறுமுறையும் “கைகுலுக்கி”விட்டு சென்றார். இவரல்லவா போலீஸ்..!!! இப்போதுதான் புரிந்தது காவல்துறை உண்மையில் நம் நண்பன் தான். 

ஆக்கம்: அதிரை உபயா (எ) உபயதுல்லா  

Advertisement

Close