“புரட்சியின் முழக்கம்” கவியரங்க நிகழ்ச்சியில் என் கவிதை

இன்று காலை துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் “புரட்சியின் முழக்கம்” கவியரங்க நிகழ்ச்சியில் என் கவிதை அரங்கேற்றம்

செங்கதிராம் பாரதியின் செந்தமிழே புரட்சியென்பேன்
சங்கொலியாய் பாரதிதா  சனின்தமிழே புரட்சியென்பேன்
மங்கிவரும் மொழிப்பற்றை மாற்றவந்த  புரட்சியென்பேன்
பங்கமின்றிப் பாடல்களில் பாவரசர் புரட்சியென்பேன்

பட்டுக்கோட்   டையிலொரு    பாட்டுக்கோட்    டைப்புரட்சி
விட்டத்தைப்     பார்த்தோர்க்கு  விடிவெள்ளி   அப்புரட்சி
பட்டத்தை        விதைத்தவர்க்குப்    பாடல்தரும் அகப்புரட்சி
கொட்டத்தை அடக்கிடவே கோட்டையாரின் பாப்புரட்சி

எழுகின்ற இடிமுழக்கம் எச்சரிக்கும் புயல்புரட்சி
விழுகின்ற ஏழைகளின் விரக்திகளே முழுப்புரட்சி
பழுக்கின்ற வேதனைகள் பாய்ந்துவரும் மனப்புரட்சி
அழுக்காறு அரசியலை அகற்றுவது களப்புரட்சி

நிலநடுக்கம் சுனாமிகளால் நிம்மதியை நாமிழந்து
குலைநடுங்கும் போக்கினையே குவலயமும் கண்டதிங்கு
இலையிங்கு பயமும்தான் இறைவனவன் மீதினிலே
அலைகளிலும் தரையினிலும் அவன்காட்டும் புரட்சியாமே!

யாப்பிலக்கணம்; தரவு கொச்சகக் கலிப்பாClose