பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன், பைக் கொண்டு செல்ல தடை!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில் பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.
சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக் கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல் வேண்டும். காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள் செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author