வேலை வேண்டும்

வேலைக் கூடச் சிறைதனிலே
விரும்பி நாமே நுழைந்துவிட்டு
மாலை நேர விடுதலையால்
மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்! 

வேலை யில்லாப் பட்டதாரி
வேலை  தேடா வேடதாரி
மாலை சூடும் மணமகளும்
மதிக்க என்றும் துணிவதில்லை!
வேலை தருமே மரியாதை
விரைந்து கிடைக்கும் ஒருபாதை
காலைத் தூக்கம் வெறுத்ததினால்
கடமை உணர்வு பெருத்திடுமே!
வேலை செய்து பெறும்பணமே
வெல்லும் வாழ்வில் பெருமிதமே
சோலை வனமாய்த் துளிர்த்திடுமே
சோகம் யாவும் துடைத்திடுமே!
வேலை செய்ய உலகமெலாம் 
விழைந்து பறந்து அலைந்திடுக
பாலை வானமும் அரவணைக்கும்
பாடு பட்டால் புகழுனக்கு!
வேலை யில்லா இளைஞர்கள்
வீணர்  களிடம் விழுவார்கள்
மூளை யில்லா வன்முறைகள்
முழுது மிவர்கள் செய்முறைகள்!
 ’ 
“கவியன்பன்” கலாம்

Close