சென்னையில் அனைவரையும் கவர்ந்த பழைய கார்களின் கண்காட்சியில் அதிரையர்கள் பங்கேற்ப்பு (படங்கள் இணைப்பு)

மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 10வது ஆண்டு, பாரம்பரிய பழைய கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு சென்னை எக்மோரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை 7 மணியில் இருந்தே பாரம்பரியமான பழைய கார்கள் பள்ளி வளாகத்திற்குள் வர ஆரம்பித்தன. பின்னர், காலை 9 மணியளவில், கார்களின் அணிவகுப்பை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் தசாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அணிவகுப்பில் கலந்து கொண்ட கார்கள் டான்போஸ்கோ பள்ளியில் இருந்து புறப்பட்டு ஸ்பர்டான் சாலை, கல்லூரி சாலை, பாந்தியன் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தன.

அதன் பிறகு, கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எம் .ஜி.ஆர். பயன்படுத்திய, 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான ‘டாட்ஜ் கிங்ஸ்வே’ கார்(பதிவு எண்: எம்.எஸ்.எக்ஸ். – 3157) திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் பயன்படுத்திய, 1952-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான ‘போர்டு பெர்பெக்ட்’ கார் (எம்.எஸ்.பி. – 9282) ஆகியவை இடம் பெற்றிருந்தன.

பிரபல தொழில் அதிபரான டி.ஏ எஸ்.ஜெயராமையாவின், 1957-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘பிளைமூத்’ கார்(டி.என்.யு. – 8899), 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘எம்.ஜி.டி.சி.’ கார்(எம்.ஒய்.ஆர். – 2325) ஆகிய கார்கள்உள்பட பழமையான 120 கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களின் 24 மோட்டார் சைக்கிள்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பாரம்பரியம் மிக்க பழமையான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும் இதில் சென்னை பணிநிமித்தமாகவும் படிப்புக்காகவும் தங்கியிருக்கும் அதிரையர்கள் பலர் பார்வையிட சென்றனர்.

சென்னையிலிருந்து படங்களுடன்: அஸ்ரப், சுஹைப் (அதிரை பிறை)

Advertisement

Close