அதிரையின் கல்வித் தந்தை சேக் ஜலாலுதீன் அவர்களின் நினைவு நாள் இன்று

அதிரை கல்வித் தந்தை அவர்களின் நினைவு நாளாம் (02 அக்டோபர்) நினைவு கவிதை; அன்னாரின் கல்வி நிறுவனத்தில் படித்தவன் என்ற நன்றியுடன்;

இன்று உலகம் கண்டது

எஸ்.எம். எஸ் என்றவொரு சுருக்கெழுத்து

அதிரை அன்றே விண்டது!
தன்னேர் இல்லாத தயாளர்;

எஸ்.எம். ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர்

கல்வி நிறுவிய தாளாளர்!
அய்யங்கார் பள்ளியில் கற்றவர்

பட்டுக் கோட்டை சென்றுபடிக்க நாடோறும்

பற்பல துன்பங்களைப் பெற்றவர்!
 

சீர்கல்வி தந்தது செம்மை

கல்விதந்த கல்வி தந்தை கல்வியைத் தொடராமல்

 தடுத்தது நோயாம் அம்மை
ஆங்கிலம், தமிழ் மொழிப் புலமை

ஆற்றலுடன் நிர்வாகம் செய்தவந்த மேன்மையால்

யாவரும் விரும்பும் தலைமை!
தான்பட்ட கஷ்டங்கள் நினைத்தவர்

தன்னுயிர்க்குப் பின்னரும் கல்விமரம் வளர்ந்திட

வித்தை நிலத்தில் விதைத்தவர்!
சாதி சமய பேதம்

காணாதவர்; அதனாற்றான் அவருடைய

நிறுவனம் காட்டும் நீதம்!
மார்க்கம் வளர நாட்டம்

சலாஹிய்யா மதரஸாவை நிறுவியவர்

தியாகம் இவரின் தேட்டம்!
விளக்காய்த் தந்தார் வித்தை

கிழக்கிலே உதிக்கின்ற கதிரவனாம் கல்விக்கு

வழங்கினார் ஈட்டிய சொத்தை!
 படிக்கும் கல்வி பேசும்

பாடுபட்ட உழைப்புகளால் மாணவர்கள் ஏற்றுகின்ற   

அச்சுடர் என்றும் வீசும்!
உயர்நிலைப் பள்ளியை

உருவாக்கிய ஆண்டு 1949

உயர்கல்விக்குக் கல்லூரியை

உருவாக்கிய ஆண்டு 1955
பெண்கள் மேனிலைப் பள்ளி

பெருமிதத்துடன் உருவானது 1981

கண்கள் உறங்காமல் இறுதி

காலம் வரைக்கும் அவரின் தியாகம்!
அவருழைப்பின் பணமெல்லாம்

அதிரையின் கல்வி நிறுவனமாகின

எவருடைய உதவியும் நாடாமல்

எளிமையிலும் வென்றெடுத்தார்!
எங்கள் அதிரையில் இவர்மட்டும்

இல்லாமலிருந்திருந்தால்

எங்கும் அறியாமை இருளாகி

ஏங்கித் தவித்திருப்பர்!
ஆரம்பக் கல்வியிவரின் வித்து

ஆலமரமாய் விருட்சங்களாய்

ஆய்வியலும், கலை , அறிவியலும்

ஆகிய கனிகளாய்ப் பழுத்து விட்டன!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

தகவல் உதவி;அன்னாரின் பெயரர்: ஆரிஃப், துபை

Close