நம் கல்வி… நம் உரிமை!- ஒரு பாட்டியின் வைராக்கியம்!

நம் கல்வி… நம் உரிமை!- ஒரு பாட்டியின் வைராக்கியம்!
கே.கே.மகேஷ்
மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது மேலூர். இந்த ஊரில் உள்ள ஜெய்ஹிந்த் திரையரங்கம் செல்பவர்கள், சாகுல் ஹமீதைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் தள்ளுவண்டியில் சுண்டல், பயறு, கடலை விற்பவர் சாகுல் ஹமீது. இவரது தாய் பரீஸா பீவி கொதிக்கும் பருத்திப் பாலை தலைச்சுமையாய் கொண்டுசென்று வீதி வீதியாக விற்பவர். சாகுல் ஹமீதுக்கு ராஜா முகம்மது, ஜெனிபர் நிஷா, பர்கானா பேகம் என்று 3 குழந்தைகள். பொருளாதாரரீதியில் மிகமிகப் பின்தங்கிய குடும்பம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமல்ல. புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்துக்கும் இந்தக் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் எடுத்த ஜெனிபர் நிஷா, மேற்படிப்பை முடித்து இன்று அந்நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் பணிபுரிகிறார். வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்குகிறது. வறுமைத்திரை மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறது.
பாட்டியின் வைராக்கியம்
சுண்டல் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும் சாகுல் ஹமீது, “எல்லாப் புகழும் அல்லாவுக்குத்தான். அதுக்கப்புறம் முக்கியமானவங்க என்னோட அம்மாதான். பேரன் பேத்திகளைப் படிக்க வெச்சே ஆகணும்னு வைராக்கியமா இருந்தாங்க அம்மா” என்கிறார்.
சாகுல் ஹமீதின் தாய் பரீஸா பீவி “நானு, என் வீட்டுக்காரவிக, என் தாய், தகப்பன்னு யாரும் படிக்கல. கை நாட்டுதேன். வீட்டுக்காரவிகளுக்குக் குடிப்பழக்கம் வேற. அதனால என் மயனையும் படிக்க விடல. சீக்கிரமே செத்துப் போயிட்டாக. வீட்லயே இட்லி சுட்டு விற்கிறதும், சாயந்தரமானா தலைச்சுமையா பருத்திப்பால் விக்கிறதும் என் தொழிலாப்போச்சு. இந்த நிலமை அடுத்தடுத்த தலைமுறைக்கும் வந்திடக்கூடாதுன்னுதான் பேரன், பேத்திகளப் படிக்க வெச்சே ஆகணும்னு அடம்புடிச்சேன்” என்று மென்மையாகப் புன்னகைக்கிறார்.
“அரசாங்கப் பள்ளிக்கூடம்னு ஒண்ணு இல்லைன்னா என் பிள்ளைகளப் படிக்க வெச்சிருக்க முடியுமா சொல்லு…?” என்று நம்மிடம் கேட்கிறார் அந்த மூதாட்டி.
அரசுப் பள்ளியின் ஆதரவு
“ஆரம்பத்துல 3 பிள்ளைகளையும் தனியார் பள்ளியிலதான் சேர்த்தேன். ஆனா, கடைசியா கரைசேர்த்தது அரசுப் பள்ளிதான். பையன் ராஜா முகம்மதை 9, 10-க்குத் தனியார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினேன். நம்ம தகுதிக்குப் பள்ளிக்கூடக் கட்டணத்தையே கட்ட முடியலீங்க. அதனால, 11, 12 மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குப் போனான். பிளஸ் 2-ல 1,100 மதிப்பெண் எடுத்து, பள்ளிக்கூடத்துலயே முதலாவதா வந்தான். அம்மா ஆசைப்பட்டதால, வங்கிக் கடன் வாங்கி காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் படிக்க வெச்சேன். மொத்தம் 80 ஆயிரம் கடன். வட்டியோட சேர்த்து ஒன்றரை லட்சம் வரைக்கும் கட்ட வேண்டியதாப்போச்சு. அதனால ஜெனிபர் நிஷாவை மேல்படிப்பு படிக்க வைக்க மனசே இல்ல. ஆனா, எங்க அம்மாவோட வற்புறுத்தல், ஆசிரியர்களோட அழுத்தம் காரணமா அவளைப் படிக்க வைக்க முடிவுசெஞ்சேன். இப்போ என் மகளை நினைக்க ரொம்பப் பெருமையா இருக்குது” என்கிறார் சாகுல் ஹமீது.
8-ம் வகுப்பு முடித்த கையோடு, மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஜெனிபர் நிஷா, 10-ம் வகுப்புத் தேர்வில் 446 மதிப்பெண் பெற்றார். “படிப்பை விட ஒழுக்கம்தான் முக்கியம்னு எங்க வீட்ல சொல்லுவாங்க. 8-ம் வகுப்பு வரை கிறிஸ்தவப் பள்ளியில் படிச்சேன். அரசுப் பள்ளியில் அந்த அளவு கட்டுப்பாடு, ஒழுக்கம் இருக்குமா என்று வீட்டில் பலருக்கும் சந்தேகம். நானும் அந்த சந்தேகத்தோடதான் அரசுப் பள்ளிக்குள்ள நுழைஞ்சேன். ஆனால், மாணவிகளை எப்படி கண்ணியத்தோடும், அன்போடும் நடத்தணும்ங்குறதுலே அங்குள்ள ஆசிரியைகள் அத்தனை கவனமா இருந்தாங்க” என்கிறார் ஜெனிபர் நிஷா.
பாடங்களில் அடிப்படையான விஷயங்களைத் தெளிவாகப் புரியவைக்கும்படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடத்துவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “பத்தாம் வகுப்பில் நான் 446 மதிப் பெண் எடுக்கக் காரணம் அதுதான். அதேசமயம், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கலைன்னு கொஞ்சம் வருத்தமும் இருந்தது. அந்த நேரத்தில்தான் என் அண்ணன் ராஜா முகம்மது, மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,100 மார்க் வாங்கி பள்ளியிலயே முதலாவதா வந்தான். படிக்கிற பிள்ளை எங்கே வேண்டுமானாலும் படிக்கும் என்று அம்மா சொன்னாங்க. அந்தத் தன்னம்பிக்கையோடதான் அரசுப் பள்ளியில படிப்பைத் தொடர்ந்தேன்” என்கிறார் ஜெனிபர் நிஷா.
பிளஸ் 2-வில் மாவட்டத்தில் முதலிடம்
“நான் எடுத்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப். ஆனா, கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு நிரந்தர ஆசிரியை கிடையாது. அந்த ஒரு குறையைத் தவிர, எல்லாமே இங்கே சிறப்புதான். பொதுவா, பெரும்பாலான பள்ளிகள்லே 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்பு பாடங்களைத்தான் அதிகமா நடத்துவாங்க. ஆனா, எங்க பள்ளியில் அப்படி இல்லை. 11-ம் வகுப்பு பாடங்களை முழுசா நடத்தி, நல்லா புரிய வச்சாங்க. 12-ம் வகுப்புல முத்துலட்சுமி, உமாதேவி, சாந்தி, திலகவதி, ஜான் சார் போன்ற ஆசிரியர்கள் எங்களை அத்தனை அக்கறையா கவனிச்சிக்கிட்டாங்க.
பாடம் நடத்திய பிறகும்கூட, புரிஞ்சிடுச்சா… புரிஞ்சிடுச்சா… என்று திரும்பத் திரும்பக் கேட்பாங்க. இல்லைன்னு சொன்னா, மறுபடியும் நடத்தத் தயங்க மாட்டாங்க. அடிக்கடி மாதிரித் தேர்வுகளை நடத்தினாங்க. தலைமை ஆசிரியை ரோஸ்லின் மேரி எங்க படிப்பு பத்தி அடிக்கடி அக்கறையா விசாரிப்பாங்க” என்கிறார்.
“வீட்டுல எங்க பெத்தமா(பாட்டி) எனக்கு அத்தனை ஊக்கம் கொடுத்தாங்க. ‘நீ வீட்ல இருந்தா எதாவது வேலை இருக்கும்’னு சொல்லி, என்னைய டியூஷனுக்கு அனுப்பி விட்டுருவாங்க. அவங்களோட ஆதரவால பிளஸ் 2-ல 1,142 மார்க் எடுத்தேன். 2009-ல் மதுரை மாவட்ட அரசுப் பள்ளியிலேயே நான்தான் முதலாவதா வந்தேன்” என்று சொல்லும் ஜெனிபர் நிஷாவிடம் பெருமிதம் மிளிர்கிறது.
இலவசமாய் கிடைத்த பொறியியல் கல்வி
“அதுக்கு மேல என்னையப் படிக்க வைக்க வசதியில்லாத தால, வீட்ல கையைப் பிசைய ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா எங்க டீச்சர்ஸும், எச்எம் மேடமும் என்னைய விடுறதா இல்லை. ‘நீ எடுத்த மார்க்குக்கு நல்ல கல்லூரியில இலவசமா இடம் கிடைக்கும். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் (சப்போர்ட் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் ரூரல் ஸ்டூடண்ட்ஸ்)-ன்னு திட்டம் இருக்குது. அரசு மேல்நிலைப் பள்ளிகள்ல முதலிடத்தைப் பிடிக்கிற ஒரு மாணவனுக்கும் ஒரு மாணவிக்கும் இலவசமா கல்வி தர்றாங்க’ன்னு தலைமை ஆசிரியை சொன்னாங்க.
சும்மா ஆறுதல் சொல்றாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த வாய்ப்பு சி.இ.ஓ. மூலமா என்னைத் தேடி வந்தபோது, அழுகையே வந்துடுச்சி. மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) படிப்பில் சேர்ந்தேன். முழுக்க முழுக்கத் தமிழ் வழியில் படிச்சதால, ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சி. ஆனாலும் எப்படிப்பட்ட குடும்பச் சூழலில் அத்தா (அப்பா) நம்மளைப் படிக்க வைக்கிறாங்கங்குற நினைப்பு மட்டும் மனசுல இருந்துக்கிட்டே இருந்துச்சு. கடுமையா உழைச்சேன். இறுதியாண்டில் காக்னிசன்ட், விப்ரோ, அக்சென்ச்சர் மாதிரியான நிறுவனங்கள்ல வாய்ப்பு கிடைச்சுது. நான் காக்னிசன்ட்டைத் தேர்வுசெஞ்சேன். நான் சம்பாதிக்கிறதுல என்னைவிட பெத்தாவுக்கும், அத்தாவுக்கும் தான் ரொம்ப சந்தோஷம்” என்று சிரிக்கிறார் ஜெனிபர் நிஷா.
“அரசுப் பள்ளியில படிச்சா நல்ல காலேஜ்ல இடம் கிடைக்குமா, இன்ஜினீயரிங் படிப்புல தாக்குப்பிடிக்க முடியுமாங்கிற சந்தேகம் யாருக்காச்சும் இருந்துச்சின்னா மாத்திக்கோங்க. கேம்பஸ் இன்டர்வியூலேயே செலெக்ட் ஆக முடியும்ங்கிறதுக்கு நானே உதாரணம். என்னோட வேலைபார்க்கிற சிலர், பிளஸ் 2 முடிக்கிறதுக்குள்ள எத்தனை லட்சம் செலவழிச்சாங்கன்னு சொல்லும்போது அரசுப் பள்ளிகளை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுவேன்” என்று பள்ளியின் புகழ் பாடுகிறார்.
ஆண்டுக்குப் பத்துப் பேர்!
“இந்தப் பள்ளியில் பிளஸ் 2வில் ஒவ்வொரு வருஷமும் பதினைந்து பேர் 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்குறாங்க. குறைஞ்சது 10 பேராவது பொறியியல் கலந்தாய்வுக்குப் போறாங்க. ஜெனிபர் நிஷா கூடப் படிச்சவங்கள்ல சுகந்தி, ரிபாயா, சுபாஷினி, முத்தரசி என்று மொத்தம் 5 பேர் பொறியாளர் ஆகிட்டாங்க. ஜெனிபர் நிஷாவோட தங்கை பர்கானா பேகமும் எங்க பள்ளியில்தான் படிக்கிறாள். 10-ம் வகுப்பில் 485 மார்க் எடுத்துள்ள அவர், பிளஸ் 2-வில் தன்னோட அக்காவின் சாதனையை முறியடிப்பானு நம்புகிறோம்” என்கிறார் இயற்பியல் ஆசிரியை.
இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு அரசுப் பள்ளி இருக்கத்தான் செய்கிறது. நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம்!
முகநூலில் படித்தது
நன்றி கே. கே. மகேஷ்

Close