ஜெயலலிதாவை பார்க்க மோடி நாளை சென்னை வருகை! 

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அதே நேரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென நேற்று சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் நண்பராக கருதப்படும் பிரதமர் மோடி கூட இன்னமும் சென்னை வந்து அவரை பார்க்கவில்லை. ஆனால் அதிமுகவுடன் கடந்த 15 ஆண்டுகள் கூட்டணியே வைக்காத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் வந்து சென்றது பல்வேறு யூகங்களையும் கிளப்பிவிட்டுப் போனது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியையும் சென்னைக்கு வரவேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி நாளை சென்னை வரக் கூடும் என கூறப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் வழக்கத்தைவிட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Close