தன் கண்ணை வைத்து அனைவரையும் கவர்ந்த டீக்கடை அர்ஷத் கான்!

திங்கள்கிழமை முழுவதும் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருந்த ஹேஷ்டேகுகளில் ஒன்று #chaiwala. எதற்காக என்று கேட்கிறீர்களா?
இஸ்லாமாபாத்தின் புகழ் பெற்ற சண்டே பஜாரில் டீக்கடை வைத்திருக்கிறார் அர்ஷத் கான் என்ற இளைஞர். அவரது நேர்த்தியான தோற்றத்தைக் கண்ட உள்ளூர் புகைப்படக்காரர் ஒருவர் அர்ஷத்தை புகைப்படம் எடுத்திருக்கிறார். ஜியா அலி என்ற அந்த புகைப்படக்காரர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை கடந்த 14-ம் தேதி பகிர்ந்திருந்தார். அன்றுமுதல் இணையத்தில் பிரபலமானார் அர்ஷத் அர்ஷத்தின் அந்த புகைப்படம் இணையத்தில் மிக வைரலாக பரவியது. சில சர்வதேச ஊடகங்கள் அர்ஷத் கான் பற்றியும் அவரது டீக்கடை பற்றியும் செய்திகள் வெளியிட்டன.


இந்நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் செய்தித்தாள் தகவலின்படி, அர்ஷத் அந்த டீக்கடையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்துள்ளார் எனத் தெரிகிறது.
திடீர் பிரபலம், ட்விட்டர் டிரெண்டில் முதலிடம் என மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கும் அர்ஷத், துனியா நியூஸ் என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், நான் டீக்கடையில் வேலையாக இருக்கும்போது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருகிறார்கள். அது என் வேலைக்கு தொந்தரவாக இருக்கிறது” என்றார்.
அர்ஷத் தோற்றம் தொடர்பாக ட்விட்டரில் வெளியான சில பதிவுகள்..
பாகிஸ்தானின் டீக்கடைக்காரர்தான் இப்போது இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலா வருகிறது என ஒரு ட்வீட் பதிவாகியிருந்தது.
மற்றொரு ட்வீட்டில், “இந்தியாவும் – பாகிஸ்தானும் கிரிக்கெட், பயங்கரவாதத்தால் வேறுபட்டிருந்தாலும் இந்த அழகான டீக்கடைக்காரரால் ஒன்றுபட்டிருக்கிறது. இது ஒரு நகைமுரண்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோல் பலரும் அர்ஷத் தொடர்பாக ட்வீட்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர் திங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தார்.
டீக்கடையில் இருந்து மாடலிங் உலகுக்கு..
அர்ஷத் கானின் படம் மிகவும் வைரலான நிலையில் அவரை Fitin.pk என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது மாடலாக நியமித்திருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்தில் ‘டீக்கடைக்காரர் அவரது தொழிலை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் இனி ஒரு மாடல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Close