சவூதியில் வேலையிழந்துள்ள 1,100 இந்தியர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சவூதி அரேபியாவில் வேலையை இழந்து வறுமையில் தவித்து வரும் இந்தியர்களில் 1,100 பேர் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் நஷ்டத்தில் இயங்கியதாகக் கூறப்படும் சில தொழிற்சாலைகள் அண்மையில் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஏற்கெனவே பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களது வேலையும் பறிபோனது.

இதனால், உணவுக்கு வழியின்றி அவர்கள் பசியால் வாடி வந்தனர். இதையடுத்து, சவூதியில் வேலை இழந்த இந்தியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைப்பும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இணைந்து உணவு விநியோகிக்கும் பணிகளை மேற்கொண்டன.
இதனிடையே, வேலையை இழந்து, பிழைப்புக்கு வழி தேடி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் விளைவாக இந்தியர்கள் சிலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் சவூதி அரேபியாவுக்கு பல முறை சென்றார். தற்போதும் சவூதி சென்றுள்ள அவர், அந்நாட்டு அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சவூதியிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான விசா-வை எந்தவிதமான தடையுமின்றி இந்தியர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் திரும்புவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author