இந்திய தேசிய கொடியை வடிவமைத்த இஸ்லாமிய பெண் சுரையா – தோழர் பிரதீப் கிருஷ்ணாவின் அருமையான கட்டுரை

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம் இழந்தவரானார். தேசியக்கொடி – நம் மாபெரும் கவுரவம். அதனால்தான் அதைக் காக்க உயிரைவிட்டான் சென்னிமலை என்னும் கிராமத்தில் பிறந்த நெசவாளி குமரன். 2018ம் ஆண்டு குடியரசு தினத்தன்று, நிலவில் இந்திய மூவர்ணக் கொடியை நட மாபெரும் திட்டம் ஒன்றை தீட்டிவருகிறது இஸ்ரோ.

அந்தப் பெருமை வாய்ந்த கொடியை வடிவமைத்தவர் என்னும் பெருமை, இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. இன்று அந்தப் பெருமைக்கு உரியவராக இருப்பவர், பிங்கலி வெங்கையா.

ஆனால், இந்தப் பெருமையில் சுரையா என்ற பெண்ணுக்குத்தான் முக்கிய பங்கிருக்கிறது என்ற செய்தி கடந்த சில வருடங்களாக, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலங்கானாவைச் சேர்ந்த பாண்டுரங்க ரெட்டி என்பவர், இந்திய தேசியக் கொடியின் வரலாற்றை ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் திடுக்கிடும் தகவல்களே இதற்கு அடிப்படை.

”இந்திய தேசியக்கொடி ஒன்றும் ஒரு சில தினங்களில் வடிவமைக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆண்டுகளாக, பல பரிணாமங்களைச் சந்தித்து உருவானதுதான் நம் மூவர்ணக் கொடி. ஆங்கிலேயே அரசாங்கத்தின் கொடியைப் புறக்கணித்து, தனி சுதேசிக் கொடி வேண்டுமென்று 1916ல் தொடங்கியது நம் தேசியக் கொடிக்கான முதல் புரட்சி. ஒவ்வோர் இடத்திலும் பல்வேறு கொடிகள் பயன்படுத்தப்பட்டாலும், 1921ல்தான் சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட நம் தேசியக்கொடி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் பிங்கலி வெங்கையா, தேசியக்கொடிக்காக 30 வடிவமைப்புகளை காங்கிரஸிடம் கொடுத்துள்ளார். இந்தியாவிலுள்ள மதங்களைக் குறிப்பதாக இருந்த நிறங்களை, உணர்வுகளின் குறியீடாக மாற்றி, காந்தி அறிவுறுத்திய அமைப்பில் கொடியை உருவாக்கியுள்ளார் வெங்கையா. உண்மையில் காந்தி மற்றும் லால் ஹன்ஸ்ராஜ் ஆகியோரின் ஆலோசனையை அவர் செயல்படுத்த மட்டுமே செய்தார் வெங்கையா” என்று கூறுகிறார் பாண்டுரங்கன் ரெட்டி.

”காங்கிரஸின் வரலாற்றைப் 870 பக்க புத்தகமாக எழுதியுள்ள மூத்த காங்கிரஸ்காரர் பட்டாபி சீதராமையா, தனது புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட, வெங்கையாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. 1957ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரின் நூற்றாண்டு விழா புத்தகத்தை எழுதிய தாராசந்தும், வெங்கையாவின் பெயரைக் குறிப்பிடவில்லை” என்றெல்லாம் குறிப்பிடுகிறார் பாண்டுரங்க ரெட்டி. .

”ராஜ்ஜியத்தின் இறுதி நாட்கள் என்ற பெயரில், டிரெவர் ராயல் என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர், நம் தேசியக்கொடியை வடிவமைத்தவர் பற்றிய குறிப்பொன்றை தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் குறிப்பில், இன்று நம் கொடியிலிருக்கும் அசோகச் சக்கரம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம்! இந்திய தேசியக்கொடியின் வடிவமைப்பில் ஒரு பெண்ணுக்குமா பெரும் பங்கிருக்கிறது. இந்தியாவின் சுதந்திரம் உறுதியான சமயம், ‘சுதந்திர இந்தியாவின்’ கொடியை அறிமுகப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டையே இருந்தது. அப்போது பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஐ.சி.எஸ் அதிகாரி பத்ருதின் தியாப்ஜி, ஒரு கட்சியின் கொடி தேசிய கொடியாக வேண்டாமென்று ஆலோசனை கூற, பிரதமர் நேருவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால், அதற்குப் பதில் அசோகச் சக்கரத்தை வைத்து கொடியை வடிவமைத்துள்ளார் பத்ருதுனின் மனைவி சுரையா.

ஆனால், காந்தி அதற்கு உடனடியாக ஒப்புதல் தரவில்லை. ‘அசோகரின் சக்கரம் இந்து – இஸ்லாம் ஒற்றுமையைக் குறிப்பதால் அதுவே சரியாக இருக்கும்’ என்று கூறியதால், சுரையாவின் வடிவமைப்பை அவர் அரை மனதோடு ஏற்றுக்கொண்டதாகவும் அந்தப் புத்தகத்தில் டிரெவர் எழுதியிருக்கிறார்” என்று பாண்டுரங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று நேருவின் காரில் பறந்த தேசியக் கொடியை வடிவமைத்தது சுரையாதான் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சுரையாவின் பங்கு இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளது. சுரையாவுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சுரையா காங்கிரஸை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவரது பெயரும் வரலாற்றில் இடம்பெற்றிருக்குமோ என்னவோ!

பெண் என்பதால் அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்படவில்லை என்பதாகச் சொல்லலாம். ஆனால், பெண்ணாக இருந்ததால்தானோ என்னவோ அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெண் என்பவளுக்குத்தான் எல்லாம் கடமை என்ற கட்டத்துக்குள் வந்துவிடுகிறதே. இன்டீரியர் டிசைனர், குக், நியூட்ரிஷியன் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள் பலர். ஆனால் அதையெல்லாம் குடும்பத் தலைவியாய்ச் செய்பவளுக்கு ஏது அங்கீகாரம்? அது அவள் கடமை தானே? அவளும் அங்கீகாரத்தை எதிர்பார்க்காத, கடமையைச் செவ்வன செய்யத் தெரிந்தவளாகவே வாழ்ந்துபழகிவிட்டாள்.

ஆனால் பெண்களே, எதுவும் கடமை மட்டுமாக முடிந்துவிடாது. உங்கள் மகனின் வெற்றியில், நீங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து போட்டுக்கொடுத்த காபிக்கும் பங்கிருக்கிறது. நீங்கள் பெருமையைத் தேடிப்போக வேண்டாம். ஆனால் உங்களுக்கான அங்கீகாரத்தை யாருக்காகவும், எதற்காகவும் இழக்காதீர்கள். உங்கள் உழைப்பிற்கான பலனை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். இல்லையேல், சுரையாவைப் போல் மறக்கப்பட்டவர்களாகி விடுவீர்கள்! உங்கள் வெற்றிக்கு கைதட்டல்கள் தர இங்கு யாரும் இல்லாவிட்டாலும், காலம் இருக்கிறது. அது நிச்சயம் பதில் சொல்லும்… இன்று சுரையாவுக்கு கூறியதுபோல!

– பிரதீப் கிருஷ்ணா

நன்றி: விகடன்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author