அடுத்த 6 மாதங்களுக்கு நம்ம ஊருக்கு பேரூராட்சி தலைவர் கிடையாது

Want create site? Find Free WordPress Themes and plugins.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாத நிலையில், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களதுபதவி காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், எஸ்டி பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அவசர கதியிலும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்கிறேன்.

மேலும் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். அதற்கான புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவி காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கவேண்டும்’ என கடந்த உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகள் நியமிக்கப்பதற்காக அவசரச் சட்டங்களை பிறப்பித்தார். அதன்படி, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சிகள் துறையின் முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கடந்த அக்டோபர் 24-ந் தேதி அரசாணை வெளியிட்டார்.

அதில் மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் தேர்தல் முடிந்து, முதல் கவுன்சில் கூட்டம் நடக்கும் வரை அல்லது டிசம்பர் 31ம் தேதி வரை இந்த அமைப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவின்படி தனி அதிகாரிகள் பதவியேற்றனர்.

இதற்கிடையில், தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதேவேளை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவில்லை.

தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு, வழக்கின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறது. அதனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவி காலம். மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை முதன்மை செயலாளர் கடந்த 31ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், பிரிவு 261-ஏ வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் தமிழக கவர்னர், தமிழ்நாடு ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி உத்தரவிட்டது.

இவர்களது பதவி காலம் டிசம்பர் 31ம் தேதி வரை என அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்த பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, (ஜூன் 30 வரை) நீட்டிக்கப்படுகிறது.

எனவே கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள, ‘டிசம்பர் 31ம் தேதி’ என்ற வரியை ‘ஜூன் 30ம் தேதி வரை’ என்று திருத்தப்படுகிறது. இந்த புதிய அரசாணை ஜனவரி 1ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இன்னும் 6 மாத காலத்துக்கு உள்ளாட்சி தேர்தல் நட வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author