அரசு பள்ளிக்கு ரூ.2.65 லட்சம் உதவி புரிந்த இஸ்லாமிய நண்பரின் உருக்கமான கடிதம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அன்பாசிரியர் 17 – ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்!

தொடரில் அன்பாசிரியர் ஆனந்த், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி அரசுப் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும், இருக்கும் சுவரின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘அன்பாசிரியர்’ தொடரைப் படித்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘தி இந்து’வின் இஸ்லாமிய வாசகர், தன் நண்பர்களோடு இணைந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க 2 லட்சத்து 65,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

காளாச்சேரி அரசுப் பள்ளிக்கு மூன்று மாதங்களில் ரூ.1 லட்சம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.65,000 என மூன்று தவணைகளாக முழுத்தொகையையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அரசுப்பள்ளிக்கு ரூ. 2.65 லட்சம் அளித்த இஸ்லாமிய வாசகர், பின்வரும் கடிதமொன்றை மின்னஞ்சல் செய்துள்ளார்.

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

2 லட்சத்து 65,000 ரூபாய் நன்கொடை அனுப்பியதற்கான ரசீதுகளை இந்த மின்னஞ்சலில் இணைத்திருக்கின்றேன்.

இந்த நற்பணியை முழுவதுமாக செய்து முடிப்பதற்கான வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு முதற்கண் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

அடுத்ததாக இந்தப் பணிக்கு தங்களுடைய பொருளால் உதவிய முஸ்லிம் சகோதர நல் உள்ளங்களுக்கு எனது நன்றி.

இந்தப்பணியைச் செய்வதற்கு வாய்ப்பளித்த ஆசிரியர் ஆனந்த் மற்றும் ‘தி இந்து’ பத்திரிகை குழுமத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த நற்பணி சிறப்பாக முடிய உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இறுதியாக, மனித சமூகத்திற்கு வாழ்நாள் முழுவதும் நற்பணி ஆற்றிக்கொண்டே இருப்பதற்கான ஊக்கத்தை நாங்கள் பெறக் காரணம் திருமறைக் குர்ஆனும், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் போதனையும்தான்.

இறைவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

எவன் ஒரு மனிதனை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான் – திருமறைக் குர்ஆன். (5:32)

முஹம்மத் நபி(ஸல்) கூறுகின்றார்கள்.

”பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: ”மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.”

ஒவ்வொரு முஸ்லிம் இதயத்திலும் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதைத் தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற சிறு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

மாணவச் செல்வங்கள் அனைவரும் நன்றாகப் படித்து, வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் பெற்று, சாதி, மதம், மொழி உணர்வுகள் இல்லாமல், எல்லை கடந்து மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய நல்லுள்ளங்களாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்கின்றேன்.

இப்படிக்கு உங்கள் சகோதரன்,

ஐக்கிய அரபு அமீரகம்.

பின்குறிப்பு: தயவு செய்து என்னுடைய பெயரைப் பிரசுரிக்க வேண்டாம்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-courtesy: tamil hindu

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author