மெரீனா பீச்சுக்குப் போகும் வழிகளுக்கு சீல் வைத்தது போலீஸ்!

சென்னையில் நேற்று பெரும் கலவரம் ஏற்பட்டது. மெரீனா கடற்கரையில் இருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டாலும் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி 400 பேர் வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மீனவர்களும் போராடி வருகின்றனர்.

கடல் அலையின் அருகில் போராடி வருபவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வேறு யாரும் மெரீனா கடற்கரைக்கு சென்று விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் கவனமாக உள்ளது.

நீடிக்கும் போராட்டம்: ஒட்டுமொத்த போராட்டக் குழு சார்பாக அரசுக்கு 3 கோரிக்கைகள் வைக்கிறோம். எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஜல்லிக்கட்டுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை 9வது பிரிவில் சேர்க்க முதல்வர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தடியடி நடத்திய காவல்துறையினர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு:  இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் கைகளில் லத்தியுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரீனா கடற்கரை சாலையில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மெரீனா கடற்கரை சீல்:  இந்த நிலையில் மெரீனா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் சீல் வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொழுது போக்க செல்பவர்கள் யாருமே மெரீனா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்:  கடற்கரை சாலைகள் மூடப்பட்டதால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நடவடிக்கையால் மீனவர்கள் மற்றும் மெரீனாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கானவர்கள் குவிந்திருந்த மெரீனா கடற்கரையில் இப்போது போலீசாரும், சில போராட்டக்காரர்களும் மட்டுமே உள்ளனர்.

குடியரசு தின விழா:  வருகிற 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் ஆளுநருக்கு பதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.

கடற்கரை சாலை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்:  கடந்த ஒரு வாரமாக மெரீனாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடைபெற்றதால் குடியரசு தின ஏற்பாடுகளை தொடங்க முடியவில்லை. நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று காலை முழுவீச்சில் தொடங்கியது. காந்தி சிலை அருகில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.அதே நேரத்தில், குடியரசு தின விழாவிற்காக மெரினா சர்வீஸ் சாலையில் உள்ள குப்பைகளை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Close