புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு- வங்கி அதிகாரி அதிர்ச்சி தகவல்

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ரூ. 2000,ரூ.500 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் போதிய அளவு பணம் சப்ளை செய்யாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 
இந்நிலையில் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இது தொடர்பாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பணம் மதிப்பு குறைப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கையால் பயனடைகின்றன. பாஸ்டன் என்ற ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனம் அறிக்கைப்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை பெரும்பாலான பணக்காரர்களுக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் இதில் எந்த ரகசியமும்,கட்டுப்பாடும் இல்லை. 
25 சதவீதம் சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை புரியாமல் மத்திய அரசு செயல்படுத்தி சிக்கி தவிக்கிறது. கிரடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 48 பைசாவை அமெரிக்காவை சேர்ந்த விசா போன்ற 3 நிறுவனங்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் போது எவ்வளவு காலம்தான் சர்வீஸ் ஜார்ஜ் இல்லாமல் செயல்படுத்துவர். எனவே 5 மாதத்தில் கார்டு பண பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ்களை வங்கிகள் பிடிக்கும்.
பண மதிப்பு குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம், 31-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது . 
இவ்வாறு அவர் கூறினார். 

Close