இஸ்லாமிய நாடுகளுக்கு இனி அமெரிக்கா விசா கிடையாது: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதே இத்தாக்குதல்களுக்குக் காரணம் எனக்குறிப்பிட்டார். மேலும், தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக, அகதிகள் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த அமெரிக்க அகதிகள் கொள்கைகளும் 120 நாட்களுக்கு செயல்படாத வகையில் புதிய நிர்வாக உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடுத்த 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவிலிருந்து மறு உத்தரவு வரும் வரை எந்த அகதிகளும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ அமைப்பில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி மற்றொரு நிர்வாக உத்தரவையும் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

Close