செல்போன் கால் கட்டணம், ஹோட்டல் சாப்பாடு விலை உயருகிறது…!

பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சேவை வரி இப்போதுள்ள 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஜூலை மாதம் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர இருப்பதால், சேவை வரி உயர்வு நிச்சயம் இருக்கும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக விமானப் பயணம், ஓட்டலில் ஏ.சி. அறையில் அமர்ந்து சாப்பிடுவது, செல்போன், தொலைபேசிக் கட்டணம், ஓட்டலில் தங்குவது, சுற்றுலா உள்ளிட்ட பலவற்றின் கட்டணம் இனி வரும் மாதங்களில் கனிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் போது, நான்கு பிரிவுகளில் அதாவது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் என விதிக்கப்பட இருக்கிறது. இப்போது சேவை வரி 15 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது, பட்ஜெட்டில் வரி குறைப்புக்கு மாற்றாக, வரிவருவாயை உயர்த்தவே அரசு விரும்புகிறது. அப்படி இருக்கும்போது, ஜி.எஸ்.டி. வரியின் இந்த 4 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் சேவையை வரி சேர்க்கப்பட வேண்டும். ஆதலால், சேவை வரி, 18 சதவீதமாகவே உயர்த்தப்படலாம் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உயர்ந்த வரி வருவாய், ஏப்ரல் முதல்ஜூன் வரையிலான முதல் காலிறுதி செலவுகளையும், திட்டங்களுக்கான நிதியையும் திரட்டிக்கொள்ள உதவியாக இருக்கும் என அரசு நம்புகிறது.
அதேசமயம், சில பொருளாதார நிபுனர்கள், சேவை வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டு, 16 சதவீதமாகவும் ஆக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். சில அடிப்படை சேவைகளுக்கு அதாவது, கல்விக்கட்டணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு சேவை வரியை 12 சதவீதமாக நிர்ணயித்து, மற்றவைகளுக்கு 16 சதவீதமாக ஆக்கப்படலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டில் சேவை வரி மூலம் ரூ. 2.31 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை சேவை வரி உயர்த்தப்பட்டால் அதுநிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தொடர்ந்து 3-வது முறையாக உயர்த்துவதாக அமையும்.

Close