மார்ச் மாதத்தில் வரலாறு காணாத மழை தமிழகத்தில் பெய்யும் – தமிழ்நாடு வெதர் மேன் அறிவிப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மழை மார்ச் மாதத்தில் பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரவீன் தனது பதிவில் 1938ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மார்ச் மாதம் பெய்த மழை அளவுகளை பதிவிட்டு, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிக அதிக அளவில் வரலாற்று சிறப்பு மிக்க மழை அளவு பதிவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் சராசரியாக 20 மில்லி மீட்டர் மழை தான் பதிவாகும். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் போல எப்போதாவதுதான் இது அதிகமாகும். அப்போது 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 150 ஆண்டுகளில் மிக அதிகம். அதோடு மார்ச் மாதம் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல மீண்டும் ஒரு முறை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் அது வாழ்நாளில் ஒரு முறை நிகழும் அதிசயம் என்று குறிப்பிட்டுள்ளார் பிரவீன்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மன்னார் வளைகுடா பகுதியை நோக்கி நகர்கிறது. இதனால், தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா பகுதி மாவட்டங்கள், திண்டுக்கல், திருச்சி, மதுரை, மத்திய மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Close