உள்ளூர்கட்டுரைகள்

அதிரைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஆபத்து…!

அதிராம்பட்டினத்துக்கும் ஹைட் ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கும் நெடுவாசலுக்கும் அமெரிக்கா தூரம் இல்லை. எல்லாம் ஒரே நிலப்பரப்புகள் தான். பேராவூரனி, பட்டுக்கோட்டையில் இருந்து வெறும் 15 கிலோ மீட்டர்களே…. இது செயல்படுத்தப்பட்டால் நமதூருக்கும் பாதிப்புகள் வரலாம். ஏன் இது வெற்றியடைந்தால் கடற்கரையும் விளைநிலங்களும் ஒருசேர கலந்துள்ள நமது அதிரையிலும் இந்த திட்டத்தை தொடங்கலாம். நெடுவாசல் போராட்டக்களத்தில் நமதூர் பங்கு நிச்சயம் தேவை…!

இந்த கட்டுரையை சற்று விளக்கமாக வாசிக்கவும்…

பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.

இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.

காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

”நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது.

இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.

இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது.

அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு ‘நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது?

35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும்.

மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

மத்திய அயோக்கிய அரசே மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்ப பெறு! தமிழ் மண்ணை நாசப்படுத்த அனுமதிக்க மாட்டோம்!

Show More

Related Articles

Close